அருகி வரும் புலிகளைப் பாதுகாக்க ராஜஸ்தானின் முழுக் கிராமமும் இடம்பெயர்ந்தது

விக்கிசெய்தி இலிருந்து

புதன், பெப்பிரவரி 15, 2012

அருகி வரும் புலிகளைப் பாதுகாப்பதற்கென வட இந்திய மாநிலமான ராசத்தானின் கிராமம் ஒன்றின் அனைத்து மக்களும் வேறு இடங்களுக்கு குடி பெயர வைக்கப்பட்டுள்ளனர் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.


சரிஸ்கா புலிகள் சரணாலயத்தைச் சேர்ந்த உம்ரி என்ற கிராமத்தில் இருந்த 82 குடும்பங்களைச் சேர்ந்த 350 பேர் புதிய இருப்பிடத்துக்கு சென்ற வாரம் இடம்பெயர்ந்தனர். 886 சதுர கிமீ பரப்பளவுள்ள சரிஸ்கா சரணாலயத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஐந்து புலிகளே எஞ்சியுள்ளன. 2002 ஆம் ஆண்டில் இங்கிருந்த புலிகளின் எண்ணிக்கை பூச்சியத்தை அடைந்திருந்தது. சில தசாப்த காலமாக புலிகளின் எண்ணிக்கை இந்தியாவில் பெருமளவில் குறைந்துள்ளது. 2011 கணக்கெடுப்பின் படி இந்தியாவில் கிட்டத்தட்ட 1,700 புலிகளே உள்ளன. நூறாண்டுகளுக்கு முன்னர் 100,000 புலிகள் வரை இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.


புலிகள் சரணாலயத்தைச் சுற்றி 11 கிராமங்கள் உள்ளதாகவும், இவற்றில் குடியுள்ள 2,500 பேர்கள் வேறு இடங்களுக்கு இடம் பெயர வைக்கப்படுவர் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்த சில ஆண்டுகளில் மேலும் 4 கிராம மக்கள் இடம் பெயர்வர்.


"மக்களை இடம் பெயர வைப்பது என்பது இலகுவான காரியமல்ல. கட்டாயமாக அவர்களை நாம் இடம் பெயர வைக்க முடியாது. இடம்பெயர அவர்கள் விரும்ப வேண்டும்," என ராசத்தான் காட்டிலாகா அதிகாரி பி. எஸ். சோமசேகர் தெரிவித்தார். இவர்களுக்கு நாம் காணி, பணம், மற்றும் கால்நடைகள் போன்றவற்றை வழங்குகிறோம் என அவர் கூறினார்.


கிராம மக்களுக்கும் சரணாலயத்தில் உள்ள புலிகளுக்கும் இடையில் நல்லுறவு எப்போதும் இருந்ததில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர் தமது எருமை ஒன்றைத் தாக்கிய புலி ஒன்றை கிராம மக்கள் நஞ்சூட்டிக் கொன்றனர்.


மூலம்[தொகு]