ராஜசுத்தானில் பேருந்து பாலத்தில் இருந்து கீழே வீழ்ந்ததில் 26 மாணவர்கள் உயிரிழந்தனர்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், மார்ச்சு 15, 2010

இந்தியாவின் வடக்கில் ராஜஸ்தான் மாநிலத்தில் மாணவர்களை ஏற்றிச் சென்ற சுற்றுலா பேருந்து ஒன்று பாலத்திலிருந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் 34 பேர் காயமடைந்தனர்.


ஜெய்ப்பூரில் இருந்து 162 கிமீ தொலைவில், சவாய் மாதோபூர் - தௌசா மாவட்டங்களின் எல்லையில் இன்று அதிகாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. புனித நகரான பிருந்தாவனுக்கு கல்விச் சுற்றுலா சென்றுவிட்டு ஜலாவர் நகருக்குத் திரும்பிய போது விபத்து நிகழ்ந்திருப்பதாக சவாய் மாதோபூர் மாவட்ட காவல்துறை அதிகாரி விகாஸ் குமார் தெரிவித்திருக்கிறார்.


கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த அனைவரும் கான்பூர் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியைச் சேர்ந்தவர்கள். இவர்களில் ஆசிரியர்களும் மாணவர்களும் அடங்குவர். 11 பேர் பெண்கள். காயமடைந்திருப்போரில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிகிறது.


இந்தியாவில் சாலை விபத்துக்களால் ஆண்டு தோறும் பல நூற்றுக்கணக்கானோர் இறக்கின்றனர். இவை பெரும்பாலும் ஓட்டுநர்களின் கவனயீனம், மற்றும் பழுதடைந்த வீதிகள் போன்ற காரணங்களால் ஏற்படுகின்றன.

மூலம்[தொகு]