உள்ளடக்கத்துக்குச் செல்

அலைக்கற்றை ஊழல்: நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்கப்படும்

Checked
விக்கிசெய்தி இலிருந்து
(அலைக்கற்றை ஊழல்: கூட்டுக் குழு விசாரணைக்குச் சம்மதம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புதன், பெப்பிரவரி 23, 2011

இந்தியாவில் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஊழல் விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சிகளின் வற்புறுத்தலுக்கு இணங்க, நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்குப் பிரதமர் மன்மோகன் சிங் சம்மதம் தெரிவித்துள்ளார்.


இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஏலத்தில் நடந்த முறைகேடுகளால் அரசிற்கு ரூ. 1,76,000 கோடி இழப்பு ஏற்படக் காரணமாக இருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் நடுவண் தொலைதொடர்பு அமைச்சர் ஆ. ராசா நீதிமன்றக் காவலில் புது தில்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ் விவகாரம் தொடர்பாக பொதுக் கணக்கு குழுவின் விசாரணையில் முழு உண்மைகளையும் வெளிக்கொணர முடியாது; எனவே முழுமையான அதிகாரம் பெற்ற நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைதான் தேவை என எதிர்கட்சிகள் ஒன்றாக இனைந்து கடந்த பாராளுமன்றக் கூட்டத்தையே நடத்த முடியாத அளவிற்குக் கொண்டு சென்று விட்டன. இதனால் நடுவண் அரசு கவலை அடைந்தாலும் கடைசிவரை பாராளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்குச் சம்மதம் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இப்பொழுது ஆண்டின் முதல் நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட முதன்மையான பணிகள் நிறைவேற்றப்பட இருப்பதால், நாடாளுமன்றத்தை அமைதியாக நடத்த வேண்டிய கட்டாயத் தேவை இருப்பதால், இம்முறையும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடாது என்று அச்சம் கொண்ட நடுவண் அரசு, நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்குச் சம்மதம் தெரிவித்துள்ளது.


நேற்று அவை கூடியதும், பிரதமர் புதிய அமைச்சர்களை அவைக்கு அறிமுகம் செய்துவைத்த பின்னர் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிற்கான அறிவிப்பை வெளியிட்டார்.


இதற்கிடையில், ஆ. ராசாவின் சகோதரரான கலியபெருமாளிடம் நேற்று அமலாக்கப் பிரிவு அலுவலர்கள் விசாரணை நடத்தினர். அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில், கலியபெருமாள் ஒரு தொழில் அதிபர் என்ற நிலையில், நடுவண் புலனாய்வுத் துறை மற்றும் அமலாக்கப்பிரிவு அலுவலர்கள் ஏற்கனவே அவருடைய வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனையிட்டிருந்தது. இந்நிலையில் இன்று அமலாக்கப் பிரிவு அலுவலர்கள் கலியபெருமாளிடம் விசாரணை நடத்தினர். அவருடைய தொழில் நிறுவனங்களின் வரவு-செலவு குறித்த வினாக்கள் எழுப்பபட்டதாகத் தெரிகிறது. ஆ. ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக் பாட்சாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது.


மூலம்

[தொகு]