உள்ளடக்கத்துக்குச் செல்

11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, பெப்பிரவரி 16, 2024

தொழில் அதிபர் நிரவ் மோதி பஞ்சாப் தேசிய வங்கியில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்த வகையில் ரூ.11,400 கோடி மோசடி செய்தார் என்று சிபிஐயிடம் பஞ்சாப் தேசிய வங்கி புகார் செய்துள்ளது. அதற்குமுன், கடன் வாங்கிய வகையில் ரூ. 280 கோடியும் மோசடி செய்ததாகவும் புகார் தரப்பட்டு இருந்தது.


இந்த இரு புகார்கள் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. நிரவ் மோதியின் வீடுகள், நகைக்கடைகள், அலுவலகங்களில் அமலாக்கப்பிரிவினர் நேற்று சோதனை நடத்தி, ரூ.5,400 கோடிக்கு அதிகமான சொத்துக்களை முடக்கினர். மேலும்,நிரவ் மோடி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, அவரின் கடவுச்சீட்டு முடக்கப்பட்டுள்ளது.


்பயர் இசுடார் டைமண்ட் நிறுவனத்தின் நிறுவனர் நீரவ் மோதி. 1.74 பில்லியன் டாலர்கள் - அதாவது, 11 ஆயிரத்து 145.65 கோடி ரூபாய் - சொத்து மதிப்புடன், ஃபோர்ப்ஸ் வெளியிட்ட 2016ம் ஆண்டிற்கான இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தவர். பிரதமர் நரேந்திர மோதியின் குசராத்தை சேர்ந்தவர். டைட்டானிக் புகழ் கேட் வின்சுலெட் 2016 ஆஸ்கர் விழாவில் நீரவ்மோதி தயாரித்த வைர சங்கிலியை அணிந்து வலம்வரும் அளவு, வைரத்தொழிலில் கொடிக்கட்டி பறந்தவர். குசராத்தைச் சேர்ந்த வைர வணிகத்தில் ஈடுபடும் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும், பெல்ஜியத்தில் வளர்ந்த நீரவ் மோதி, இசையமைப்பாளராக ஆக வேண்டும் என்றும் இளம் வயது முதல் கனவு கண்டவர்.


வார்ட்டன் வணிக பள்ளிக் கல்வியை 19 வயதில் கைவிட்ட நீரவ் மோதி, இந்தியா திரும்பி குடும்பத்தின் வைர வியாபாரத்தில் ஈடுபடலானார். கீதாஞ்சலி ரத்தின கற்கள் (Gitanjali Gems) என்ற பெயரில் வைர வியாபாரம் செய்துவந்த நீரவின் உறவினர் மெகுல் சோப்சியுடன் இருந்து 10 ஆண்டுகள் தொழில் கற்றுக் கொண்டதாக அவரே பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.


2000ம் ஆண்டு 15 தொழிலாளர்களுடன் Firestar Diamond International நிறுவனத்தை தொடங்கிய நீரவ், படிப்படியாக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார்


நீரவ் மோதியின் நிறுவனம் ஆங்காங்கில் இருந்து வைரம் இறக்குமதி செய்யவுள்ளதாகக் கூறி பஞ்சாப் தேசிய வங்கியிடம் LoU ஆவணம் பெற்றுள்ளது. ஆங்காங்கில் உள்ள அலகாபாத் வங்கி கிளையிடம் பணம் பெற LoU அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, நீரவ் மோதிக்கு குறிப்பிட்ட பணத்தை ஆங்காங்கில் உள்ள அலகாபாத் வங்கிக் கிளை அளிக்கும். இறக்குமதி பொருள் இந்தியா வந்ததும், நீரவ் மோதி பஞ்சாப் தேசிய வங்கி அப்பணத்தை திருப்பி செலுத்திவிட வேண்டும். அப்பணத்தை பஞ்சாப் தேசிய வங்கி அலகாபாத் வங்கிக்கு செலுத்தும்.


இந்த நடைமுறையில்தான் சுமார், 11,380 கோடி ரூபாய் அளவு மோசடி நடைபெற்றுள்ளது. தனது வங்கி அதிகாரிகள் சிலர் விதிமுறைகளை மீறி, சட்டவிரோதமாக போலியான LoU அளித்துள்ளதாகவும், அதை வைத்து வெளிநாட்டு வங்கிக் கிளைகளிடம் வெளிநாட்டு பணமாக பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளதாகவும் பஞ்சாப் தேசிய வங்கி தற்போது குற்றம்சாட்டியுள்ளது.


மோசடி நடைபெற்றதாக கூறப்பெறும் தொகை இந்திய வங்கித்துறையையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மோசடி நடைபெற்றதாக கூறப்படும் தொகையான ரூ.11,380 கோடி என்பது, நாட்டின் 2வது பெரிய பொதுத்துறை வங்கியை பெரிதாக்குவதற்காக அரசு செலவிட்டுள்ள தொகையை விட இரு மடங்காகும். அதாவது, பஞ்சாப் தேசிய வங்கியின் மொத்த மூலதனத்தில் இது மூன்றில் ஒரு பங்கு. இத்தொகை 2016-17ல் பஞ்சாப் தேசிய வங்கி ஈட்டிய லாபத்தை விட 8.5 மடங்கு. ஒற்றை வரியில் சொல்வதானால், இந்திய வங்கித்துறையில் நடைபெற்ற முறைகேடுகளிலேயே இதுதான் மிகப்பெரியது.


இந்த முறைகேடு வெளிப்பட்டுள்ளதை அடுத்து, இந்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள நீரவ் மோதிக்கு சொந்தமாக மும்பை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் உள்ள நகை கடைகளில் அமலாக்கத்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் 5,100 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், 17 இடங்களில் உள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.


மூலம்

[தொகு]