உள்ளடக்கத்துக்குச் செல்

அலைக்கற்றை ஊழல் பணத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை, தொலைக்காட்சி நிருவாகம் மறுப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து
(அலைக்கற்றை ஊழல் பணத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை: தொலைக் காட்சி நிருவாகம் மறுப்பு. இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சனி, பெப்பிரவரி 12, 2011

'2ஜி அலைக்கற்றை ஊழல் பணத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை' என்று தமிழகத்தின் கலைஞர் தொலைக்காட்சி நிருவாகம் தெரிவித்துள்ளது.


அலைக்கற்றை ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ஆண்டிமுத்து ராசா உட்பட அலுவலர்கள் கைதுக்குப் பின், இது குறித்த விசாரணைத் தேவையை கருத்தில் கொண்டும், விசாரணையைச் சரியாகக் கையாளவேண்டியும், மும்பையைச் சேர்ந்த 'ஸ்வான்' நிறுவன அதிபர் ஷாஹித் உஸ்மான் பல்வாவும் கைது செய்யப்பட்டார். அவரைக் கைது செய்து விசாரிக்கையில், அவருக்குச் சொந்தமான 'சினியுக்' நிறுவனம் ரூ. 210 கோடியை 2009-ம் ஆண்டு கலைஞர் தொலைகாட்சியின் பங்குகளில் முதலீடு செய்தது தெரியவந்தது.


இதைத்தொடர்ந்து, முன்னணிச் செய்தி ஏடுகளும், தொலைக்காட்சிகளும், இந்திய நடுவண் புலனாய்வுத் துறை மற்றும் அமலாக்கப்பிரிவு இயக்குநரக வட்டாரங்களை மேற்கோள் காட்டி அலைக்கற்றை ஊழல் பணம் கலைஞர் தொலைக்காட்சியில் முதலீடு செய்யப்பட்டிருக்கலாம் என்று 'பரபரப்பைக்' கிளப்பியுள்ளன.


ஆனால் இது குறித்து கலைஞர் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த 2007-2008 -ம் ஆண்டுகளில் நடைப்பெற்ற மையத் தொலைத்தொடர்புத் துறையின் 'ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டிற்கும், 'சினியுக் நிறுவனம் - கலைஞர் தொலைகாட்சி' இடையே நடைப்பெற்ற வரவு செலவுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை; சினியுக் நிறுவனம் ஒரு தொகையை கலைஞர் தொலைக் காட்சியில் முதலீடு செய்தது; பின்பு கலைஞர் தொலைக்காட்சிக்கும் சினியுக் நிறுவனத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இத் தொகையை சினியுக் நிறுவனம் திருப்பி எடுத்துக் கொண்டது. இந்தக் கருத்து வேறுபாடு காரணமாகக் கலைஞர் தொலைகாட்சி நிறுவனம், இத் தொகையைக் கூடக் கடன் தொகையாகக் கருதி, அதற்கு வட்டியாக ரூ. 31 கோடியைக் கொடுத்து விட்டது. இந்நடவடிக்கைகள் அனைத்தும் அப்போதே வருமான வரித்துறைக்கும் தெரிவிக்கப்பட்டுவிட்டது; தேவையான அனைத்து வரிகளும் அப்பொழுதே செலுத்தப்பட்டுவிட்டன; எனவே 'ஊழல் பணம்' கலைஞர் தொலைக் காட்சியில் முதலீடு செய்யப்பட்டது என்று கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர் தொலைக் காட்சி சார்பில் அதன் நிருவாக இயக்குனர் சரத்குமார் இந்த மறுப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.


அதே வேளை, அலைக்கற்றை பிரச்சினையில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஸ்வானின் உரிமையாளரான டி.பி.ரியாலிட்டியே வேறு ஒரு நிறுவனம் வழியாக ரூ. 210 கோடியை கலைஞர் டிவிக்கு முதலீடாகத் தந்தது என்றும் அது சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் கூறியிருக்கிறது.


மூலம்

[தொகு]