ஆத்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு, பலர் இடம்பெயர்வு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, திசம்பர் 31, 2010

ஆத்திரேலியாவின் வடக்குப் பிரதேசத்தில் உள்ள குயின்ஸ்லாந்து மாநிலத்தின் அரைவாசிக்கும் அதிகமான பகுதிகள் இயற்கைப் பேரிடர் வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பல நகரங்கள் தொடர்ந்து பெய்த கன மழையாலும் மோசமான வெள்ளப் பெருக்காலும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனதாக வெள்ள நிலைமையைப் பார்வையிட்ட பின்னர் பிரதமர் ஜூலியா கிலார்ட் செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார்.


குயின்ஸ்லாந்து மாநிலம்
குயின்ஸ்லாந்து மாநிலம்

ரொக்காம்ப்டன் நகரில் வெள்ள மட்டம் உயர்ந்து வருவதால் அங்கிருந்து 4,000 பேர் வரையில் இடம்பெயர்ந்துள்ளனர். தியோடர் நகரத்தில் டாவ்சன் ஆற்றில் நீர் மட்ட அளவு அதிகபட்ச அளவை எட்டியது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் 350-க்கும் மேற்பட்டோர் உலங்குவானூர்திகள் மூலம் வெளியேற்றப்பட்டனர்.


"மூன்று ஆறுகள் இப்போது பெருக்கெடுத்துள்ளன; அடுத்த 24 மணி நேரத்தில் பெரும் எண்ணிக்கையானோர் வீடுகளை இழப்பர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்," என குயின்ஸ்லாந்து மாநில முதல்வர் அன்னா பிளை தெரிவித்தார்.


எமிரால்ட் நகரில் வெள்ள மட்டம் இப்போது 16 மீட்டர் மட்டத்திற்கு உயந்துள்ளதாகவும் தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


நொகோவா ஆறு இன்று வெள்ளிக்கிழமை தனது அதிஉயர் மட்டத்திற்கு உயர்ந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்குள்ள 1,200 பேர் வெளியேறுவதற்குத் தயார் நிலையில் உள்ளனர். உலங்கு வானூர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக பல மில்லியன் டாலர் மதிப்புள்ள கமத்தொழில் விளைச்சலுக்கு பெருத்த நட்டம் ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மூலம்[தொகு]