உள்ளடக்கத்துக்குச் செல்

ஆத்திரேலியாவின் ஜெசிக்கா வாட்சன் உலகைச் சுற்றிப் படகோட்டி சாதனை படைத்தார்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, மே 15, 2010

பாய்மரப் படகில் வெற்றிகரமாக உலகை வலம் வந்து திரும்பிய 16 வயது ஜெசிக்கா வாட்சனை சிட்னி துறைமுகத்தில் இன்று பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்து வரவேற்றனர்.


ஜெசிக்கா வாட்சன் உலகைச் சுற்றி வந்த கடல் வழி

எவ்விடத்திலும் தரித்து நிற்காமல், தன்னந்தனியே உலகைச் சுற்றி வந்த முதலாவது வயது குறைந்தவர் என்ற பெருமையை இவர் பெற்றார்.


இவர் 18 இற்குக் குறைவான வயதுடையவர் என்பதனால் இவரது சாதனை கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது என படகுகளுக்கான உலக வேகச் சாதனை மன்றம் (World Speed Sailing Record Council) அறிவித்துள்ளது.


சென்ற ஆண்டு அக்டோபர் 18 ஆம் நாள் சிட்னியை விட்டு இவர் புறப்பட்டார். ஜெசிக்கா வாட்சன் உலகைச் சுற்றி வர 7 மாதங்கள் அவருக்குப் பிடித்துள்ளது. இப்பயணம் அவரது குறைந்த வயது காரணமாக மிகவும் ஆபத்தானதாக இருந்திருக்கிறது என விமரிசகர்கள் முன்னர் கருத்துத் தெரிவித்திருந்தனர்.


10 மீட்டர் நீளமான எல்லாவின் பிங்க் லேடி என்ற பாய்மரக்கப்பல் இன்று சனிக்கிழமை சிட்னி வந்த போது ஆத்திரேலியப் பிரதமர் கெவின் ரட் உட்படப் பல்லாயிரக்கணக்கானோர் அங்கு கூடி பெரும் வரவேற்பளித்தனர். தொலைக்காட்சிகள் அனைத்தும் இதனை நேரடியாக ஒளிபரப்பின.


சென்ற ஆண்டு தனது 17வது வயதில் உலகைச் சுற்றி வலம் வந்த பிரித்தானியாவைச் சேர்ந்த மைக் பேர்ஹம் இன்றைய சிட்னி வரவேற்பில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இவர் உலகைச் சுற்றி வர 9 மாதங்கள் பிடித்தது.


ஜெசிக்கா மொத்தம் 23,000 கடல் மைல் தூரம் பயணித்து உலகைச் சுற்றி வந்தார். ஆனாலும் இந்தத் தூரம் உலகைச் சுற்றிவரப் போதாது என படகுகளுக்கான உலக வேகச் சாதனை மன்றம் தெரிவித்துள்ளது. இவர் மத்தியக் கோட்டின் வட முனை வரை செல்லவில்லை என அம்மன்றம் தெரிவித்துள்ளது.


ஜெசிக்கா தனது பாய்மரப் படகுப் பயணக் கதையை ரூப்பர்ட் மேர்டொக்கின் நியூஸ் லிமிட்டட் நிறுவனத்துக்கு $625,000 அமெரிக்க டாலருக்கு விற்றுள்ளார்.

மூலம்[தொகு]