ஆத்திரேலியாவில் புலிகளுக்கு நிதி சேகரிப்பு வழக்கில் ஈழத்தமிழர் மூவரும் விடுதலை
வியாழன், ஏப்பிரல் 1, 2010
- 6 அக்டோபர் 2016: இந்தியாவின் சிசாட்-18 ஏரியான் விண்கலம் மூலம் விண்ணுக்கு செலுத்தப்பட்டது
- 19 திசம்பர் 2015: பூமிக்கு அருகில் உயிரினம் வாழத்தக்க கோள் ஒன்றை ஆத்திரேலிய அறிவியலாளர்கள் கண்டுபிடித்தனர்
- 29 ஏப்பிரல் 2015: இத்தோனேசியாவில் எட்டு பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது
- 9 ஏப்பிரல் 2015: தென்கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா ஒப்பந்தம்
- 9 ஏப்பிரல் 2015: கிழக்கு திமோரில் செய்தியாளர்கள் கொலை தொடர்பில் ஆஸ்திரேலியா போர்க்குற்ற விசாரணை
ஆத்திரேலியாவில் பயங்கரவாதத்துக்குத் துணை போனது குறித்த குற்றச்சாட்டுக்களுக்காகக் கைது செய்யப்பட்ட மூன்று ஈழத்தமிழர்கள் மீதான பல கோடி செலவுடன் நடத்தப்பட்ட வழக்கில் மூவரும் நன்னடத்தைப் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். இத்தீர்ப்பு ஆத்திரேலிய நடுவண் காவல்துறையினருக்கு ஒரு பெரும் பின்னடைவாக ஆத்திரேலிய ஊடகங்கள் கருத்துத் தெரிவித்துள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதி சேகரித்த குற்றத்திற்காக இவர்கள் மூவரும் 2007 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் குற்றசாட்டப்பட்டுள்ள மூவரில் ஒருவரான ஆறுமுகம் ரஜீவன் என்பவரை நடுவண் காவல்துறையினர் உரிய ஆதாரங்கள் இன்றி வீதியில் குப்புறப் படுக்கவைத்து கைவிலங்கு மாட்டியமை தொடர்பில் நீதிபதி அவர்கள் தமது கண்டனத்தை வெளியிட்டிருந்தார்.
மெல்பேர்ணில் அவுஸ்திரேலிய மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி போல் கோக்லன் நேற்று இம்மூவரையும் அவர்களின் நன்னடத்தை காரணமாக விடுதலை செய்துள்ளதாக தி ஏஜ் பத்திரிகை தெரிவிக்கிறது. ஒவ்வொருவரும் 1,000 ஆத்திரேலிய டாலர்கள் நன்னடத்தைப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இவர்கள் மூவர் மீதும் பயங்கரவாத சட்டப்பிரிவின் கீழ் பொலிசார் வழக்குத் தொடுத்திருந்தபோதும், விடுதலைப் புலிகள் அமைப்பு ஆத்திரேலியாவில் தடை செய்யப்படாத அமைப்பு என்பதால், கடந்த ஆண்டு பயங்கரவாதப் பிரிவின் கீழான வழக்கை காவல்துறையினர் திரும்பப் பெற்றதுடன் ஐக்கிய நாடுகளாலும் பெரும்பாலான உலக நாடுகளால் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்ட ஓர் இயக்கத்துக்கு நிதியுதவி புரிந்ததாக இவ்வழக்கு பின்னர் மாற்றப்பட்டிருந்தது.
மெல்பேர்ணைச் சேர்ந்த தமிழ் பத்திரிகை ஒன்றின் ஆசிரியர் சிவராஜா யாதவன் (வயது 39), ஆரூரன் விநாயகமூர்த்தி (வயது 35) மற்றும் சிட்னியைச் சேர்ந்த கணக்காளரான ஆறுமுகம் ரஜீவன் (வயது 43) ஆகியோரே விடுவிக்கப்பட்டுள்ளனர்.
”இம்மூவரும் ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழ் மக்களிடம் பணம் சேகரித்து இம்மூவரும் இலங்கையின் பிரிவினைவாத அமைப்புக்கு அனுப்பியிருந்தனர். தமிழ்ப் புலிகள் ஒரு பயங்கரவாத இயக்கம் என அவர்களுக்குத் தெரிந்திருந்தது ஆனால் அவர்கள் அவ்வமைப்பைப் பயங்கவாத அமைப்பாகப் பார்க்கவில்லை” என நீதிபதி தெரிவித்தார். கிட்டத்தட்ட 55 நிமிடங்கள் அவர் தனது தீர்ப்பை வாசித்தார்.
இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உதவவெனவே அவர்கள் பணத்தை அனுப்பினர். இக்கொடுப்பனவு அவ்வேளையில் தமிழ்ப் புலிகளுக்கூடாக மட்டுமே செய்திருக்க முடியும். | ||
—நீதிபதி போல் கோக்லன், மெல்பேர்ண் |
”இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உதவவெனவே அவர்கள் பணத்தை அனுப்பினர். இக்கொடுப்பனவு அவ்வேளையில் தமிழ்ப் புலிகளுக்கூடாக மட்டுமே செய்திருக்க முடியும். ஆனால் அவர்களின் பணம் அங்கு வேறு வகையில் செலவிடப்பட்டதில் இவர்களுக்கு எதுவும் கட்டுப்பாடு இருக்கவில்லை” என நீதிபதி தெரிவித்தார்.
”ஆரூரன் விநாயகமூர்த்தி $97,000 பெறுமதியான மின்னியல் உபகரணங்களைக் கொள்வனவு செய்து அனுப்பியதை ஒப்புக்கொண்டிருந்தார். இவ்வுபகரணங்களின் ஒரு பகுதி விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்புகளுக்குப் பயன்பட்டதை விநாயகமூர்த்தி அறிந்திருக்கவில்லை. அவ்வுபகரணம் புலிகளின் காவல்துறையினருக்கே பயன்படுத்தப்படவிருந்ததாக அவர் நினைத்திருந்தார்” என நீதிபதி தெரிவித்தார்.
விடுதலை செய்யப்பட்ட பின்னர் ஊடகவியலாலருக்குக் கருத்துத் தெரிவித்த ஆரூரன், “இலங்கையில் உள்ள ஒரு தமிழன் இலங்கை அரசிடம் இருந்து எவ்வித நீதியையும் எதிர்பார்க்க முடியாது. ஆனால் இன்று ஆஸ்திரேலிய நீதி அமைப்புக்கு அமைவாக நாம் எமக்கு நீதியைப் பெற்றுக் கொண்டோம்” என்றார்.
”தமிழரின் போராட்டத்தை கிழக்குத் திமோரில் பிரெட்டிலின் போராட்டம், மற்றும் தென்னாப்பிரிக்காவில் ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரசின் போராட்டம் போன்றவற்றுடன் ஒப்பிடலாம்,” என மூவருக்காகவும் வாதாடிய வழக்கறிஞர் ரொப் ஸ்டேரி தெரிவித்தார்.
ஆரூரனுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு $1,000 டாலர் எதிர்கால நன்னடத்தை முன்நிபந்தனையின் பேரில் அவர் உடனடியாகவே விடுவிக்கப்பட்டார். ஏனையோருக்கு ஓர் ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் $1,000 எதிர்கால நன்னடத்தை முன்நிபந்தனை பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த 2007 ஆம் ஆண்டு இம்மூவரும் பயங்கரவாத முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு 25 ஆண்டுகள்ள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்
[தொகு]- Tamil trio accused of terrorism free on bonds, தி ஏஜ், ஏப்ரல் 1, 2010
- அவுஸ்திரேலியாவில் விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரும் விடுதலை!, நெருடல், ஏப்ரல் 1, 2010
- அவுஸ்ரேலிய விடுதலைப்புலிகளுக்கு உதவிசெய்தார்கள் என குற்றம் சுமத்தப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த மூன்று தமிழர்களும் விடுதலை, தமிழ்வின், மார்ச் 31, 2010