ஆத்திரேலியாவில் 4,000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியர் குடியேற்றம், ஆய்வுகள் தெரிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சனவரி 15, 2013

4,000 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது கற்காலத்தில் இந்தியர்களின் குடியேற்றம் ஆத்திரேலியாவில் இடம்பெற்றுள்ளதை மரபணு ஆய்வுகள் தெரிவித்துள்ளன.


ஆத்திரேலியப் பழங்குடிகள்

40,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆத்திரேலியக் கண்டத்தில் மனிதக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டது முதல் 1700களில் ஐரோப்பியர்களின் வருகை வரை ஆத்திரேலியா உலகில் தனித்திருந்த பிரதேசம் என நம்பப்பட்டு வந்தது. ஆனால், ஆத்திரேலியப் பழங்குடியினரின் மரபணுச் சோதனைகள் மூலம், இவ்விடைப்பட்ட காலப்பகுதியில் இந்தியர்களின் வருகை அதிகமாக இருந்தது தெரிய வந்துள்ளது.


ஆத்திரேலியாவில் டிங்கோ நாய்களை இந்தியர்களே அறிமுகப்படுத்தினர் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அறிவியலுக்கான தேசியக் கழகத்தின் செயலமர்வுகளில் இது குறித்த ஆய்வுகள் வெளியிடப்பட்டன. இந்தியர்கள் தம்முடன் நுண்கற்கள் எனப்படும் கல்லாயுதங்களையும் தம்முடன் கொண்டு வந்ததாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


ஆத்திரேலியாவின் ஆரம்பகாலக் குடியேற்றம் பற்றிய ஆய்வுக்கு ஆத்திரேலியப் பழங்குடியினரதும், நியூ கினி, தென்கிழக்காசியா, தென்னிந்தியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களினதும் மரபணுக்கள் ஒப்பிடப்பட்டன. இவ்வாய்வுகளின் படி, 35,000 முதல் 45,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆத்திரேலியப் பழங்குடியினரதும், நியூகினியினரதும் மரபியலில் ஒற்றுமை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில், ஆத்திரேலியாவும், நியூ கினியும் சாகுல் என்றழைக்கப்பட்ட ஒரே நிலப்பகுதியைக் கொண்டிருந்தன.


இதே வேளையில், "4,000 முதல் 4,500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்கும், ஆத்திரேலியாவுக்கும் இடையில் இருந்தமையும் எமக்குத் தெளிவாகத் தெரிகின்றது," என செருமனியைச் சேர்ந்த மானுடவியலுக்கான மாக்ஸ் பிளாங்க் கல்விக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஸ்டோன்கிங் தெரிவித்தார். இக்காலப்பகுதியைச் சேர்ந்த மனித எச்சங்கள், மற்றும் தொல்லியல் கண்டுபிடிப்புகளையும் இவர்கள் ஆராய்ந்தனர்.


"இந்தியர்கள் எவ்வழியாக இக்கண்டத்திற்கு வந்தார்கள் என்பதை இந்த மரபணுச் சோதனைகள் தெரியப்படுத்தவில்லை, ஆனாலும் ஆத்திரேலியா நாம் முன்னர் கருதியது போன்று தனித்த உலகமாக இருக்கவில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது," என்றார் பேராசிரியர் ஸ்டோன்கிங்.


அரப்பா நாகரிகம் வட இந்தியாவில் அருகி வந்த காலத்தில் வடக்கு ஆத்திரேலியாவில் இந்த மனிதக் குடியேற்றம் நிகழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இன்றைய திராவிட-மொழி பேசும் இந்தியர்களின் தரவுகள் மூல மக்களின் மரபியலுடன் அதிகளவில் ஒத்துப்போவதாக இவ்வாய்வுகளில் பங்குபற்றிய இரீனா பூகச் தெரிவித்தார்.


மூலம்[தொகு]