ஆந்திர முதலமைச்சர் ஹெலிகாப்டர் விபத்தில் கொல்லப்பட்டார்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், செப்டெம்பர் 3, 2009, இந்தியா:


ஆந்திர மாநில முதலமைச்சர் வை.எஸ். ராஜசேகர ரெட்டி, உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்துவிட்டதாக, இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அறிவித்துள்ளார்.


ராஜசேகர ரெட்டி பயணம் செய்த உலங்கு வானூர்தி மலைப்பகுதியில் மோதி, தீப் பிடித்ததில், அவரும், பைலட் உள்ளிட்ட மற்ற நான்கு பேரும் அதே இடத்தில் கருகி உயிரிழந்திருப்பது இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது.


நேற்றுக் காலை ஐதராபாத்தில் இருந்து சித்தூருக்கு உலங்கு வானூர்தியில் பயணம் செய்தார் ராஜசேகர ரெட்டி. ஆனால், சுமார் 9.15 மணியளவில் அவரது ஹெலிகாப்டருடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. நேற்று முதல் அந்த ஹெலிகாப்டரைத் தேடும் பணியில், இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் உள்பட பல ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. அத்துடன், தரைமார்க்கமாகவும் தேடும் பணி நடைபெற்றது.


இன்று காலை சுமார் எட்டரை மணியளவில், ஒரு மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் பல பாகங்களாக உடைந்து கருகிய நிலையில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் அதைக் கண்டுபிடித்ததாக உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார். கர்னூலில் இருந்து சித்தூருக்கு தெற்குத் திசையில் செல்ல வேண்டிய ஹெலிகாப்டர், கிழக்குத் திசையில் சென்று மலைப்பகுதியில் மோதியிருப்பதாக சிதம்பரம் தெரிவித்தார்.


கமாண்டோக்கள் அந்தப் பகுதியில் இறக்கப்பட்டு, சடலங்களைத் தேடியபோது, ஐந்து சடலங்கள் கருகிய நிலையில் கிடப்பது உறுதி செய்யப்பட்டதாக சிதம்பரம் தெரிவித்தார். முதல்வர் ராஜசேகர ரெட்டியுடன், அவரது தனிச் செயலர் சுப்ரமணியம், பாதுகாப்பு அதிகாரி மற்றும் இரு பைலட்டுகள் ஆகியோரும் உயிரிழந்துவிட்டதாக சிதம்பரம் தெரிவித்தார்.


சடலங்கள் இன்னும் விபத்து நடந்த இடத்தில் இருப்பதாகவும், விரைவில் அவை ஐதராபாத் கொண்டுவரப்படும் என்றும் உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்புள்ள செய்திகள்

மூலம்