உள்ளடக்கத்துக்குச் செல்

ஆப்கானித்தானில் குர்ஆன் எரிப்புக்கு மன்னிப்புக் கோரியது அமெரிக்கா

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், பெப்பிரவரி 23, 2012

கிழக்கு ஆப்கானித்தானில் நிலைகொண்டுள்ள அமெரிக்க இராணுவத்தினர் இராணுவ முகாம் ஒன்றில் இசுலாமியப் புனித நூலான அல்-குர்ஆனை எரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் காபூல் மற்றும் நாட்டின் கிழக்குப் பகுதி நகரமான சலாலாபாத் ஆகிய நகரங்களில் அமெரிக்க எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் ஆப்கானிய காவல்துறையைச் சேர்ந்த நால்வர் உட்பட குறைந்தது பத்துபேர் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


ஆப்கானித்தானில் அமெரிக்கப் படைகள் தங்கியுள்ள பக்ரம் விமானப்படை தளத்தின் குப்பைக்கிடங்கில் எரிந்த நிலையில் இசுலாமியர்களின் புனித நூலான குர்ஆன் கிடந்ததை உள்ளூர்வாசிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து ஆப்கானியர்கள் அமெரிக்கர்களுக்கு எதிராக சுலோகங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். முன்னதாக போராட்டக்காரர்கள் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.


தாங்களால் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட குரான் உட்பட புத்தகங்களை எரித்ததற்காக அமெரிக்க இராணுவம் உடனடியாக மன்னிப்பு கோரியது. அந்தப் புத்தகங்கள் மூலம் தமக்கிடையே தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் செய்திகளை பரிமாறிக் கொண்டனர் என்று அமெரிக்கர்கள் நம்பியுள்ளனர்.


ஆப்கானில் உள்ள நேட்டோ படைகளின் தலைவர் ஜெனரல் ஜான் ஆலன் கூறுகையில், குப்பைக்கிடங்கில் போட்டு எரிக்கக் கொடுத்த புத்தகங்களுக்கு நடுவே தெரியாதத்தனமாக குர்ஆன் இருந்துள்ளது. எரிக்கக் கொடுத்தவற்றில் குர்ஆன் இருந்தது தெரிய வந்ததுமே அதை தடுத்து நிறுத்திவிட்டோம். இதை யாரும் வேண்டும் என்றே செய்யவில்லை என்றார்.


ஆப்கானித்தானில் இசுலாமியர்களின் புனிதநூலான குர்ஆன் எரிக்கப்பட்டது ஒரு துரதிட்டமான சம்பவம் என்று வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் ஜே. கார்னி தெரிவித்துள்ளார். இந்த நிகழ்விற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆப்கான் அதிபர் அமீத் கர்சாய் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.


மூலம்[தொகு]