ஆப்கானித்தானில் மருத்துவமனை தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டனர்
- 27 சனவரி 2018: காபூலில் நடந்த தற்கொலைதாரி தாக்குதலில் குறைந்தது 95 பேர் பலி
- 13 ஏப்பிரல் 2017: ஆப்காத்தானில் அமெரிக்கா அனைத்து குண்டுகளின் தாய் எனப்படும் பெரும் வெடிகுண்டை போட்டது
- 28 அக்டோபர் 2015: பாகிஸ்தான், ஆப்கனில் நிலநடுக்கம், 263 பேர் உயிரிழப்பு
- 9 ஏப்பிரல் 2015: தலிபான்களால் கடத்தப்பட்ட பிரித்தானியச் செய்தியாளர் மீட்பு
- 21 செப்டெம்பர் 2014: ஆப்கானித்தானில் தேர்தல் சர்ச்சைக்கு பின் ஏற்பட்ட சமரசத்தில் புதிய அதிபர் தேர்ந்தெடுப்பு
ஞாயிறு, சூன் 26, 2011
ஆப்கானித்தானின் கிழக்கே லோகார் மாகாணம், அஸ்ரா மாவட்டத்தில் மருத்துவமனை ஒன்று குண்டுவெடிப்புக்கு இலக்கானதில் பெண்கள் குழந்தைகள் உட்பட குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதலில் மேலும் 50 பேர் வரை காயமடைந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. மருத்துவமனை பெரும் சேதத்துக்குள்ளானதாகவும், இடிபாடுகளிடையே பலரது உடல்கள் சிக்குண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தலிபான் இயக்கத்தினரே இத்தாக்குதலுக்குக் காரணம் என அதிகாரிகள் தெரிவித்த போதும் தலிபான் இயக்கம் இதனை மறுத்துள்ளது. தாம் பொதுமக்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்துவதில்லை என தலிபான் பேச்சாலர் ஒருவர் தெரிவித்தார்.
நேற்று சனிக்கிழமை தலைநகர் காபூலில் இருந்து 40 கிமீ கிழக்கே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. வாகனம் ஒன்ரைச் செலுத்திவந்த தற்கொலைக் குண்டுதாரி ஒருவரை மருத்துவமனை வாயிலில் காவல்துறையினர் தடுத்த போது குண்டை வெடிக்க வைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவம் நடைபெற்ற வேளையில் மருத்துவமனையில் பெருமளவு வெளி நோயாளிகள் சிகிச்சைக்காகக் குழுமியிருந்தனர். மருத்துர்கள், மற்றும் தாதிமாரும் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பலர் தீக்காயங்களினால் இறந்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.
ஆப்கானித்தானில் பொதுமக்களின் இழப்புகள் அண்மைக்காலத்தில் அதிகரித்துள்ளதாக இம்மாதம் வெளியிடப்பட்ட ஐநா அறிக்கை ஒன்று கூறியுள்ளது. மே மாதத்தில் மட்டும் 368 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இத்தொகை 2007 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஒரே மாதத்தில் கொல்லப்பட்டவர்களில் மிகக் கூடிய எண்ணிக்கை ஆகும். 2010 ஆம் ஆண்டில் 2,777 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மூலம்
[தொகு]- Afghanistan: Deadly attack on Logar hospital, பிபிசி, சூன் 25, 2011
- Suicide car bomber kills 35 at Afghan clinic, சின்குவா, சூன் 25, 2011