உள்ளடக்கத்துக்குச் செல்

ஆப்கானித்தான் சிறையில் இருந்து போராளிகள் உட்பட 470 கைதிகள் தப்பினர்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஏப்பிரல் 25, 2011

ஆப்கானித்தானின் கண்டகார் நகரச் சிறைச்சாலையில் இருந்து நேற்றிரவு 320 மீட்டர் நீளச் சுரங்கப் பாதை ஒன்றை அமைத்து 470 இற்கும் அதிகமான சிறைக்கைதிகள் தப்பி ஓடினர்.


சுரங்கப் பாதை சிறைக்கு வெளியில் இருந்தே அமைக்கப்பட்டதாகவும், தப்பியோரில் பெரும்பாலானோர் தலிபான் தீவிரவாதிகள் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தப்பிய சிறைக் கைதிகளில் சிலர் மீண்டும் பிடிபட்டுள்ளதாக கண்டகார் மாகாண ஆளுநர் தெரிவித்தார். ஆனாலும் மேலதிக தகவல்களை அவர் வெளியிடவில்லை.


சுரங்கப்பாதை 320 மீட்டர் (1,050 அடி) நீளம் உடையதென்றும் அதனை அமைப்பதற்குத் தமக்கு ஐந்து மாதங்கள் வரை பிடித்ததாகவும் தலிபான் பேச்சாளர் சபியுல்லா முஜாஹிட் தெரிவித்தார். தப்பியோரில் ஏறத்தாழ 100 பேர் தலிபான் தளபதிகள் எனவும் ஏனையோர் சாதாரண போராளிகள் என்றும் அவர் கூறினார்.


கடந்த மூன்று ஆண்டுகளில் இது இரண்டாவது பெரும் சிறைச்சாலை உடைப்பு எனக் கூறப்படுகிறது. 2008 சூன் மாதத்தில், கண்டகார் சிறையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் ஒன்றை அடுத்து 900 கைதிகள் தப்பியிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் தலிபான் போராளிகள் ஆவர். கண்டகார் சிறைச்சாலை 1,200 கைதிகளை உள்ளடக்கக்கூடியது.


மூலம்

[தொகு]