ஆப்கானிய மாகாண ஆளுநர் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டார்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, அக்டோபர் 8, 2010

ஆப்கானிஸ்தானின் குண்டூசு என்ற வடக்கு மாகாணத்தின் ஆளுநர் பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலின் போது கொல்லப்பட்டார். அவருடன் மேலும் 14 பேர் இறந்தனர்.


டலோக்கான் என்ற நகரத்தில் வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொண்ட போதே ஆளுநர் முகமது ஒமார் கொல்லப்பட்டார். மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாக மாகாண பாதுகாப்பு உயரதிகாரி தெரிவித்தார்.


இத்தாக்குதலுக்கு உடனடியாக எவரும் உரிமை கோரவில்லை. ஆளுநர் ஒமார் அரசுத்தலைவர் அமீது கர்சாயிற்கு நெருங்கியவர் என்றும், இவர் முன்னர் பல தடவைகள் தாலிபான்களின் தாக்குதல்களில் இருந்து உயிர் தப்பியவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவரது சகோதரர் சென்ற ஆண்டு தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டார்.


இதற்கிடையில் கோஸ்டு மாகாணத்தில் நேட்டோ உலங்குவானூர்தி ஒன்றைத் தாக்குவதற்கு முற்பட்ட ஐந்து பேரை நேட்டோ படையினர் சுட்டுக் கொன்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் இத்தாக்குதலில் உயிழந்தவர்கள் பொதுமக்களே எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


மூலம்