உள்ளடக்கத்துக்குச் செல்

ஆப்பிரிக்க தேசியக் காங்கிரசின் நூற்றாண்டு விழாவில் தமிழ்க் கூட்டமைப்பு கலந்து கொண்டது

Checked
விக்கிசெய்தி இலிருந்து
(ஆப்பிரிக்க தேசியக் காங்கிரஸின் நூற்றாண்டு விழா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திங்கள், சனவரி 9, 2012

ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரசின் நூற்றாண்டு விழாவில் இலங்கையில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கலந்து கொண்டனர். தென்னாப்பிரிக்கா நேற்று ஞாயிற்றுக்கிழமை இவ்விழாவைக் கொண்டாடியது. சிறுபான்மை வௌ்ளையர் நிர்வாகத்துக்கு எதிராகப் போரிட்ட ஏஎன்சி என்ற ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரசின் பிறப்பிடமான புளூம்பொன்டீன் நகரில் நடந்த நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தார்கள்.


உலக நாடுகள் மற்றும் ஆபிரிக்கத் தலைவர்கள், பேராயர் டெஸ்மன்ட் டூட்டு மற்றும் ஆப்பிரிக்க- அமெரிக்க சிவில் உரிமைகள் ஆர்வலர் ஜெசி ஜாக்சன் போன்றோரும் புளூம்பொன்டீன் நகரில் கூடியிருந்தனர். புளூம்பொன்டீன் நகரத் திருச்சபைக்கு முன்பாக தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா ஏற்றி வைத்த நூற்றாண்டு விடுதலைத் தீபம் அருகே உள்ள சுதந்திர அரங்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இங்கு பேசிய தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா, ஆப்பிரிக்காவினதும் உலகினதும் ஒத்துழைப்புடன் நிறவெறியையும் காலனித்துவத்துவத்தையும் வெற்றிகொண்ட தென்னாபிரிக்க மக்களுக்கு இதுவொரு பொன்னான நாள் என்று கூறினார்.


தென்னாப்பிரிக்காவில் 1912 சனவரி 8-ம் நாள் இனவெறிக்கு எதிராக மிகப்பெரிய விடுதலை இயக்கமாக ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. 1960 இல் இக்கட்சி தடை செய்யப்பட்டது. இனவெறிக்கு எதிராக போராடிய நெல்‌சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். பி்ன்னர் பல்வேறு போராட்டங்களுக்கு இடையே 1990-ம் ஆண்டு அங்கீகாரம் வழங்கப்பட்டு அதன் தலைவராக நெல்சன் மண்டேலா இருந்த போது 1994-1999 நடந்த தேர்தலில் அக்கட்சி பெரு வெற்றி‌ பெற்று அரசுத் தலைவராக நெல்சன் மண்டேலா பதவியேற்றார்.


தென்னாப்பிரிக்க விடுதலைத் தலைவர் நெல்சன் மண்டேலாவின் உடல்நிலை காரணமாக அவரால் இந்த நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை. நிறவெறியின் முடிவில் கட்சியை ஆட்சி அதிகாரத்தை நோக்கி கொண்டு வழிநடத்திய, 93வயதான நெல்சன் மண்டேலா அண்மைக்காலமாக பொது நிகழ்வுகள் எதிலும் கலந்துகொள்ளவில்லை.


இதேவேளை, இந்த நூற்றாண்டு விழாவில் இலங்கையிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆர். சம்பந்தன், சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். லண்டனை மையமாகக் கொண்ட உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை, உலகத் தமிழர் பேரவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால் இவ்விழாவில் இலங்கை அரசாங்கம் கலந்துகொள்ளவில்லையென்று அரச வட்டாரங்களை மேற்கோள்காட்டி உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.


மூலம்

[தொகு]