உள்ளடக்கத்துக்குச் செல்

தென்னாப்பிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலா காலமானார்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, திசம்பர் 6, 2013

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அரசுத்தலைவரும்,சிறுபான்மை வெள்ளையர் ஆதிக்கத்தில் இருந்து தென்னாப்பிரிக்காவை மீட்பதற்காகப் போராடிய புரட்சியாளருமான நெல்சன் மண்டேலா தனது 95வது அகவையில் தலைநகர் ஜோகன்னசுபர்க்கில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு காலமானார் என அந்நாட்டின் அரசுத்தலைவர் யாக்கோபு சூமா அறிவித்துள்ளார்.


நெல்சன் மண்டேலா (2008 இல்)

தொலைக்காட்சியில் பேசிய சூமா, "மண்டேலா அமைதியாக இறந்தார்," என்று தெரிவித்தார். நமது நாடு ‘தலைசிறந்த மகனை’ இன்று இழந்து விட்டது என அவர் கூறினார். மண்டேலாவின் இறுதிச் சடங்கு முடியும் வரை நாடு முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றார்.


நெல்சன் மண்டேலா கடந்த சில மாதங்களாக நுரையீரல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 3 மாதங்களுக்கு முன் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டார். தென்னாப்பிரிக்க நேரப்படி நேற்று நள்ளிரவு 12.50 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டது. அப்போது அவரது குடும்பத்தினர் அருகில் இருந்தனர்.


மண்டேலாவின் மறைவிற்கு உலகத் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா கூறுகையில், இந்த உலகம் இனி நெல்சன் மண்டேலா போன்ற ஒரு தலைவரைக் காணாது. நெல்சன் மண்டேலாவை உதாரணமாகக் கொள்ளாமல் எனது வாழ்வை நினைத்துப்பார்க்க முடியாது என்றார். இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரன் வெளியிட்ட அறிக்கையில், இந்த உலகின் சுடர் ஒளி மறைந்து விட்டதாகக் கூறியுள்ளார்.


இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நெல்சன் மண்டேலா உண்மையான காந்தியவாதி என்றும், உலகின் தலை சிறந்த மனிதர்களில் ஒருவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.


நெல்சன் மண்டேலாவுக்கு 1990-ம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. 1993-ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.


இவரின் இறுசி சடங்குகள் இம்மாதம் 15 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை அரச மரியாதையுடன் நடக்கவுள்ளதாக தென்னாப்பிரிக்க அரசுத்தலைவர் யாக்கோபு சூமா அறிவித்துள்ளார்.


மூலம்

[தொகு]