ஆப்பிளின் இணை-நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் 56வது அகவையில் காலமானார்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், அக்டோபர் 6, 2011

ஐக்கிய அமெரிக்காவில் ஆப்பிளின் இணை-நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் நேற்று புதன்கிழமை தனது 56 வது அகவையில் புற்றுநோயால் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கணினித் தொழில்நுட்பத் துறையை புரட்சிகரமாக மாற்றி அமைத்த இவர், 2010 இல் ஆப்பிள் நிறுவனத்தை உலகின் பெறுமதி (350 பில்லியன்) மிக்க நிறுவனமாக வளர்த்தெடுத்தார். இவர் உலகில் மிகவும் பணமும், செல்வாக்கும் மிக்கவர்களில் ஒருவர் ஆவார்.


இசுடீவ் யோப்சு

கணினித் துறைக்கு இவரின் பங்களிப்பு அளப்பரியது. 1977 இல் இவரது நண்பர் இசுடீவ் வோசுனியாக் உடன் இணைந்து உலகின் முதலாவது முழுமையான வீட்டுக் கணினியை உருவாக்கினார். இந்தக் கணினியை சந்தைப்படுத்த அவர்கள் இருவரும் நிறுவயதே ஆப்பிள் நிறுவனம் ஆகும். 1986 இல் அன்று கணினி அசைபட உருவாக்கத்தில் முன்னோடியாக இருந்த பிக்சர் நிறுவனத்தை வாங்கினார். 2006 இல் இந்த கம்பனியை டிசுனிக்கு 7.4 பில்லியன் டொலருக்கு விற்றார்.


1998 இல் ஆப்பிள் ஐ-மாக் கணினியை வெளியிட்டது. 2001 இல் ஐபாட்டையும், அதே ஆண்டு ஐரூன்சையும், 2007 இல் ஐபோனையும், 2010 ஐபாட்டையும் ஆப்பிள் வெளியிட்டது. இவை அனைத்தும் சந்தையில் மிக வரவேற்பைப் பெற்றுப் பெரும் தொகையில் விற்பனையாகின. இதனால் 2010 இல் 350 பில்லியன் பெறுமதியுடன் உலகின் மிகப் பெரிய வணிக நிறுவனமாக அப்பிள் மாறியது.


இவர் வெளியே அறியப்பட்ட பெரும் கொடைகள் எதையும் செய்யவில்லை. மாற்றாக தனது படைப்புக்களே உலகுக்கு தான் செய்யும் கொடை என்றும், அதுவே அவரை நிம்மதியாக நித்திரை கொள்ள வைக்கிறது என்றும் கூறினார்.


இவரது இறப்பு ஆப்பிள் நிறுவனத்தில் எதிர்கால புத்தாக்க நிலையை கேள்விக்கு உட்படுத்தி உள்ளது. இவரது நெறிப்படுத்தல் இல்லாமல் ஆப்பிள் பழைமை பேணி புத்தாக்க வீச்சை இழந்துவிடும் என்று சிலர் எதிர்வு கூறுகிறார்கள்.


மூலம்