உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர்க்டிக்கில் தனது பகுதியை உறுதிப்படுத்துவதற்கு உருசியா இரண்டாவது கப்பலை அனுப்புகிறது

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சூலை 5, 2011

ஆர்க்டிக் கண்டத்தில் உள்ள தனது பகுதிகளை உறுதிப் படுத்திக் கொள்ளுவதற்காக அணுவாற்றலில் இயங்கும் ரசியா என்ற பனி-உடைப்புக் கப்பல் ஒன்றை உருசியா இன்று அனுப்புகிறது. இக்கப்பல் அங்கு ஏற்கனவே உள்ள பியோதரவ் என்ற ஆய்வுக் கப்பலுடன் இணைந்து கொள்ளும்.


ஆர்க்டிக்கில் உள்ள லமனோசொவ் முகட்டை உருசியாவும் கனடாவும் உரிமை கோருகின்றன. ஏற்கனவே உள்ள தனது பகுதிகளின் விரிவே இப்பகுதி என ஐக்கிய நாடுகளிடம் இந்த இரு நாடுகளும் முறையிட்டுள்ளன. ஆனாலும், அறிவியல் ரீதியான ஆதாரத்தைத் தருவதே இப்பிரச்சினைக்குத் தீர்வாகலாம் என்பதை இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.


"ஆய்வுக் கப்பலின் முழுமையான பயணத்தின் போது ரசியா என்ற இந்த பனி-உடைப்புக் கப்பல் அதனுடன் பயணிக்கும் எனவும், இதன் மூலம் முழுப் பயணத்தின் போதும் கப்பலின் வேகம் மாறாமல் இருப்பதை உறுதிப் படுத்தும். இதனையே நாம் எமது ஆதாரங்களுக்குப் பயன்படுத்துவோம்," என ரொஸ்அட்டம்ஃபுலொட் நிறுவனத்தின் பேச்சாளர் எக்கத்தரீனா அனானியேவா தெரிவித்தார்.


இரு மாதங்கள் நீடிக்கும் இப்பயணத்தில் லமனோசொவ் முகட்டின் அடியில் உள்ள வண்டல் பகுதியின் தடிப்பை அளவிடுதல் எமது முக்கிய நோக்கம். உருசியா இவ்வாய்வில் வெற்றி பெற்றால், ஆர்க்டிக் அடுக்கில் உள்ள பெருமளவு ஆற்றல் வளங்களை உருசியா பயன்படுத்தும் வாய்ப்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உருசியப் பிரதமர் விளாதிமிர் பூட்டின் சென்ற வாரம் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், "லமனோசொவ், மற்றும் மெண்டெலீவ் முகடுகளின் உரிமையை நாம் என்றுமே விட்டுக் கொடுக்கப்போவதில்லை," எனக் கூறியிருந்தார்.


பியோதரொவ் ஆய்வுக் கப்பலுடன் பணியாற்றுவதற்காக உருசியா சென்ற ஆண்டு தனது யாமல் என்ற தனது பனி-உடைப்புக் கப்பலை இதே நோக்கத்திற்காக அனுப்பியிருந்தது.


மூலம்[தொகு]