ஆஸ்திரேலியத் தேர்தல் 2010: ஜூலியா கிலார்ட் சுயேட்சை ஒருவரின் ஆதரவைப் பெற்றார்

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

செப்டம்பர் 3, 2010

ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்ற நான்கு சுயேட்சை உறுப்பினர்களில் ஒருவர் ஜூலியா கிலார்ட் தலைமையிலான தொழிற்கட்சிக்கு ஆதரவு வழங்குவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதன் மூலம் தொழிற்கட்சி ஆட்சியமைக்க இன்னும் இருவரின் ஆதரவைப் பெற்றால் போதும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.


சுயேட்சை உறுப்பினர் ஆண்ட்ரூ வில்க்கி (2007 இல்)

தாஸ்மானியாவின் டெனிசன் தேர்தல் தொகுதியில் தெரிவான ஆன்ட்ரூ வில்க்கி என்பவர் ஜூலியா கிலார்ட் ஒரு நிலையான ஆட்சியை அமைக்கத் தகுதியானது எனத் தெரிவித்திருக்கிறார்.


ஏனைய மூன்று சுயேட்சைகளும் இதுவரையில் தமது முடிவை அறிவிக்கவில்லை. மூவரும் தொழிற்கட்சியுடனும் தாராளவாதக் கட்சியுடனும் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளனர்.


தேர்தல் முடிந்து இரண்டு வாரங்களாகியும் எக்கட்சி ஆட்சியமைக்க இருக்கிறது என்பது இழுபறி நிலையிலேயே உள்ளது.


ஏற்கனவே பசுமை கட்சியினரின் ஆதரவு பிரதமர் ஜூலியா கிலார்ட்டுக்கு கிடைத்துள்ளது. கரிம வணிகக் கொள்கை மற்றும் சுரங்கத் தொழிலாளர் வரி ஆகியவை மீதான அரசின் போக்கினால் அதிருப்தி காணப்படுவதாகக் கூறும் பசுமை கட்சியினரின் ஆதரவு கிடைத்துள்ளது. தொழிற்கட்சியினர் ஆட்சியைப் பிடித்தால் பசுமைக் கட்சியினரின் உடன்படிக்கைக்கு அமைய காலநிலை மாற்றத்துக்கு எதிராகப் போராடுதல், ஆப்கானியர்களின் மோதல் குறித்த நாடாளுமன்ற விவாதங்களை நடத்தல் மற்றும் பொருளாதார ரீதியில் வரவுசெலவுத் திட்ட விடயங்கள் குறித்து பசுமைக் கட்சியினருடன் ஆலோசித்தல் போன்ற விடயங்களில் அரசு ஈடுபடவேண்டும்.


சுயேட்சை உறுப்பினர் வில்க்கியின் ஆதரவுடன் தொழிற்கட்சிக்கு 74 இடங்களும், தாராளவாதக் கட்சிக் கூட்டணிக்கு 73 இடங்களும் கிடைத்துள்ளன. ஆட்சியமைக்க 76 இடங்களைப் பிடித்தாக வேண்டும்.


வில்க்கியின் கோரிக்கைகள் பலவற்றை கிலார்ட் ஏற்றுக் கொண்டுள்ளார், அவற்றில் ஹோபார்ட் பொது மருத்துவமனைக்கு மேலதிக நிதி வழங்குதல், போக்கர் சூதாட்ட இயந்திரங்களுக்கு கட்டுப்பாடு கொண்டு வருதல் போன்றவை இவற்றில் சிலவாகும்.

மூலம்

Bookmark-new.svg