உள்ளடக்கத்துக்குச் செல்

ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளை ஏற்றி வந்த படகு மூழ்கியதில் பலர் உயிரிழப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், நவம்பர் 2, 2011

இந்தோனேசியாவில் இருந்து ஆத்திரேலியாவுக்கு அகதிகளை ஏற்றி வந்த படகு ஒன்று மூழ்கியதில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்தனர். மேலும் பலரைக் காணவில்லை என இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மொத்தம் 57 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஈரான், மற்றும் ஆப்கானித்தானைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது. மேற்குத் திமோர் மாகாணத்தில் கிலாக்கேப் என்ற படகுத்துறையில் இருந்து புறப்பட்ட இப்படகு ஜாவாத் தீவருகே நேற்று செவ்வாய் அன்று மூழ்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. பெருமளவு அகதிகளை ஏற்றி வந்ததாலேயே படகு மூழ்கியதாகக் கூறப்படுகிறது.


வேறு எவரும் உயிர் தப்பியிருக்க வாய்ப்பில்லை என ஆத்திரேலியாவின் குடிவரவுத்துறை அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்துள்ளார்.


ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கில் ஆஸ்திரேலியா நோக்கிப் படகுகளில் வந்த வண்ணம் உள்ளனர். படகு அகதிகளின் வருகையைக் கட்டுப் படுத்துவற்தற்காக அண்மையில் ஆஸ்திரேலியப் பிரதமர் ஜூலியா கிலார்ட் மலேசியாவுடன் ஒரு உடன்பாட்டுக்கு வந்திருந்தார். ஆத்திரேலியாவுக்குள் வரும் அகதிகளை மலேசியாவுக்கு அனுப்பி அங்குள்ள முகாம்களில் தங்க வைத்து அவர்களின் விண்ணப்பங்களைப் பரிசீலிப்பது என்பதே உடன்பாடு. ஆனாலும் இவ்வுடன்பாட்டை ஆத்திரேலிய உச்சநீதிமன்றம் சட்டவிரோதமானது எனக்கூறி நிராகரித்ததை அடுத்து இவ்வுடன்பாடு கைவிடப்பட்டது.


ஆத்திரேலியாவின் முக்கிய எதிர்க் கட்சி பசிபிக் தீவான நரூவில் அகதிகளுக்கான முகாம் அமைப்பதற்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்து வருகிறது. ஆனாலும் இத்திட்டத்திற்கு ஆளும் கட்சி பெரும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறது.


மூலம்

[தொகு]