உள்ளடக்கத்துக்குச் செல்

இசையமைப்பாளரும் நடிகருமான சந்திரபோஸ் தனது 60வது வயதில் காலமானார்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, அக்டோபர் 1, 2010


"மாங்குடி மைனர்", "மச்சானைப் பார்த்தீங்களா" உள்ளிட்ட பல தமிழ்த் திரைபடங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான சந்திரபோஸ் நேற்று வியாழக்கிழமை சென்னை அரசு பொது மருத்துவமனையில் காலமானார்.


வி.சி.குகநாதனின் இயக்கத்தில் 1977-ம் ஆண்டு வெளிவந்த "மதுர கீதம்' படத்தின் மூலம் அறிமுகமான சந்திரபோஸ் தொடக்க காலத்தில் இசையமைப்பாளர் தேவாவுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகள் நடந்தினார். எம்எஸ்விஸ்வநாதன் இசையில் ஆறு புஷ்பங்கள் படத்தில் சந்திரபோஸ் பாடிய ஏண்டி முத்தம்மா அவரை மிகப் பிரபலமாக்கியது.


பின் "மாங்குடி மைனர்', "மச்சானை பார்த்தீங்களா' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து பிரபலமானார். "மச்சானைப் பார்த்தீங்களா' படத்தில் இடம்பெற்ற "மாம்பூவே சிறு மைனாவே' பாடல் ரசிகர்கள் நினைவில் என்றும் நிற்கும் பாடலாகும்.


"மனிதன்', "ஊர்க்காவலன்', "அண்ணா நகர் முதல் தெரு', "புதிய பாதை', "விடுதலை", முதல் குரல், மைக்கேல்ராஜ், சங்கர் குரு, தாய் மேல் ஆணை, ராஜா சின்ன ரோஜா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தார். மனிதன் படத்தில் வரும் வானத்தைப் பார்த்தேன், மனிதன் மனிதன், அண்ணா நகர் முதல் தெரு படத்தில் இடம்பெற்ற 'மெதுவா மெதுவா', சங்கர் குருவில் இடம் பெற்ற 'காக்கிச் சட்ட போட்ட மச்சான்', மக்கள் என் பக்கம் படத்தில் வரும் 'ஆண்டவனைப் பாக்கணும்' போன்ற பாடல்கள் மிகப் புகழ்பெற்றவை. வி. சேகரின் இயக்கத்தில் வெளிவந்த "நான் பெத்த மகனே" திரைப்படத்தில் இவர் கடைசியாக இசையமைத்திருந்தார்.


அண்மைக்காலங்களில் திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர் நாடகங்களிலும் நடித்து வந்தார். "கத்திக் கப்பல்' படத்தில் இவரது நடிப்பு பரவலான பாராட்டுகளைப் பெற்றது. தற்போது "சூரன்' என்ற படத்தில் நடித்து வந்தார். "மலர்கள்', "திருப்பாவை' உள்ளிட்ட சில தொலைக்காட்சி நாடகங்களில் இவர் நடித்துள்ளார்.


12 வயதிலேயே பாய்ஸ் நாடகக் கம்பெனியில் நடித்த இவர், கலைஞர் நடித்த மணிமகுடம், கலைஞரின் பராசக்தி நாடகம் ஆகியவற்றிலும் நடித்திருக்கிறார்.


நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று 30ம்தேதி இறந்தார். மறைந்த சந்திரபோசுக்கு இராஜகுமாரி, கீதா என்ற இரு மனைவிகளும், சந்தோஷ்,வினோத் சந்தர் என்ற இரு மகன்களும், கௌரி என்ற மகளும் உள்ளனர்.

மூலம்