இத்தாலியின் ஃபிலத்தீனோ நகரம் விடுதலையை அறிவித்தது

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, செப்தெம்பர் 4, 2011

இத்தாலியின் மத்தியப் பிராந்தியத்தில் உள்ள ஃபிலத்தீனோ என்ற சிறிய நகரம் இத்தாலியில் இருந்து விடுதலையை அறிவித்து புதிதாக நாணயத் தாள்களையும் அச்சிட்டுள்ளது.


ரோம் நகரின் கிழக்கே 100 கிமீ தூரத்தில் அமைந்துள்ள ஃபிலத்தீனோ நகரை அருகிலுள்ள ட்ரேவி என்ற நகருடன் இணைக்க வேண்டுமென உள்ளூர் நிர்வாகச் செலவுகளைக் குறைக்கும் ரோம் அரசாங்கத்தின் புதிய ஒழுங்குவிதிகள் வற்புறுத்தி வந்தன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்நகரம் தனி நாடாக விடுதலையை அறிவித்துள்ளது. நகர முதல்வர் லூக்கா செல்லாரியின் தலை பொறிக்கப்பட்டுள்ள ஃபியரீத்தோ என்ற புதிய நாணயத் தாள்கள் ஏற்கனவே உள்ளூர் சந்தைகளில் புழக்கத்துக்கு வந்துவிட்டன.


கடல் மட்டத்திலிருந்து 1063 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ள ஃபீலத்தீனோ 77.5 சதுரகிலோ மீற்றர் பரப்பைக் கொண்டது. மொத்தம் 550 பேர் இங்கு வாழ்கின்றனர். விடுதலை அறிவிப்பு அந்நகரில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக நகர முதல்வர் தெரிவித்தார். தனக்கென தனியான சின்னம், மற்றும் இணையத்தளம் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வறிவிப்புக் குறித்து உலகளாவிய ரீதியில் பெருமளவு பேசப்படுகிறது.


எண்ணற்ற சமஸ்தானங்களையும் நிர்வாக அலகுகளையும் கொண்டு ஒரு காலத்தில் உருவானது தான் இத்தாலி. இன்று குட்டி நிலத் துண்டான சான் மாரினோ குடியரசினால் தன்னந்தனியாக தனித்து நிற்க முடிகின்றதென்றால் ஃபிலத்தீனோவால் மட்டும் ஏன் முடியாது என்பது தான் மேயர் லூக்கா செல்லாரியின் வாதம்.


மூலம்[தொகு]