உள்ளடக்கத்துக்குச் செல்

ஆந்திரப் பிரதேசத்தில் தமிழ்நாடு அதிவிரைவு தொடருந்தில் தீ; 47 பேர் உயிரிழப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து
(இந்தியாவின் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் தொடருந்தில் தீ; 32 பேர் உயிரிழப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திங்கள், சூலை 30, 2012

தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த தமிழ்நாடு அதிவிரைவு தொடர் வண்டி ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் அருகே தீப்பிடித்ததில் குறைந்தது 47 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த சனிக்கிழமை தில்லியில் புறப்பட்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த போது இன்று திங்கட்கிழமை அதிகாலை 4.20 மணிக்கு எஸ்-11 எனப்படும் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டியில் தீ விபத்து எற்பட்டது. இத்தீவிபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த பெட்டியில் மொத்தம் 72 பேர் வரை பயணிக்கலாம். இதில் 26 வரை மீட்கப்படுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு சிலர் ஓடும் வண்டியில் இருந்து கீழே பாய்ந்து உயிர் தப்பினர். அதிகாலையில் இவ்விபத்து ஏற்பட்டதால் பல பயணிகள் தூக்கத்தில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.


இந்த தொடர்வண்டியில் 15 பேர் வரை தமிழகத்தை சேர்ந்தவர்கள் பயணித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சென்னையில் இருந்து உறவினர்கள் மற்றும் மருத்துவக்குழுவுடன் சிறப்பு தொடருந்து ஒன்று நெல்லூர் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளது.


இவ்விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் தீயில் கருகியுள்ளதால் அடையாளம் காண்பது கடினம் என நெல்லூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் ஆந்திர முதலமைச்சர் கிரண் குமார் ரெட்டியும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.


கடந்த மே மாதத்தில் ஆந்திரப் பிரதேசத்தில் பயணிகள் வண்டி ஒன்று சரக்கு வண்டியுடன் மோதியதில் 24 கொல்லப்பட்டனர். இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் தொடருந்து விபத்துகளில் மட்டும் மொத்தம் 1,220 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர் என அண்மையில் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.


மூலம்

[தொகு]