இந்திய சினிமா நூற்றாண்டு, மக்களும் மரபுகளும்: சர்வதேச ஆவணப்பட விழா

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சனவரி 20, 2013

திருநெல்வேலி தூய சவேரியார் கல்லூரி (தன்னாட்சி)யின் நாட்டார் வழக்காற்றியல் துறையும் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையமும் 'சித்திரமும் கைப்பழக்கம்' இயக்கமும் இணைந்து நிகழ்த்தும் "இந்திய சினிமா நூற்றாண்டு மக்களும் மரபுகளும்" சர்வதேச ஆவணப்பட விழா நாளை சனவரி 21, சனவரி 22 ஆகிய நாட்களில் தூய சவேரியார் கல்லூரியின் கௌசானல் அரங்கில் காலை 10 மணி முதல் மாலை 6 வரை நிகழ உள்ளது. இந்நிகழ்விற்கு தூய சவேரியார் கல்லூரி அருள்திரு முனைவர் ஆ. ஜோசப் தலைமை தாங்கவும் நாட்டார் வழக்காற்றியல் துறையைச் சார்ந்த பேராசிரியர் நா. இராமச்சந்திரன் வரவேற்புரை நிகழ்த்தவும் உள்ளனர்.


இந்நிகழ்வில் முனைவர். ஆ. தனஞ்செயன் எழுதிய ஆவணப்படம் பாணிகளும் கோட்பாடுகளும் என்னும் நூலை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் ச. தமிழ்ச்செல்வன் வெளியிடவும், தூய சவேரியார் கலைமனைகளின் அதிபர் அருள்திரு பிரிட்டோ வின்சென்ட் நூலைப் பெற்றுக் கொள்ளவும், நூலறிமுகத்தை ஆவணப்பட இயக்குநர் கே.பி. கதிரவவேல் வழங்கவும் உள்ளனர். இந்நிகழ்வில், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்தின் இயக்குநர் அருள்திரு முனைவர். அ. ஆரோக்கியசாமியும் நியூ செஞ்சுரி புக் ஹவுசின் நிருவாகி கிருஷ்ணமூர்த்தி கருத்துரை வழங்கவும் நாட்டார் வழக்காற்றியல் துறையின் துறைத்தலைவர் முனைவர். ஆ. தனஞ்செயன் நன்றியுரைக்கவும் உள்ளனர்.


ஆவணப்பட திரையீட்டின் போது நிகழவுள்ள விவாதத்தில் முனைவர் சகாயராஜ், பேராசிரியர் பெர்னார்ட் சந்திரா எழுத்தாளர் சிவசங்கர், முனைவர் மணிவண்ணன், பேராசிரியர் அமலநாதன், பேராசிரியர் ஜெ. பாலசுப்பிரமணியம், பேராசிரியர் இராதா, பேராசிரியர். ஜெய் சக்திவேல், ஆய்வாளர் சாந்தினி சாரா, பேராசிரியர் புருஷோத்தமன், முனைவர். சாந்தி ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். நிகழ்ச்சியை நாட்டார் வழக்காற்றியல் துறையைச்சார்ந்த முனைவர் ஜே. ஜோசப் அந்தோணி ராஜ், பேராசிரியர் பீட்டர் ஆரோக்கியராஜ், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்தைச்சார்ந்த முத்துராஜா மற்றும் சித்திரமும் கைப்பழக்கம் இயக்கத்தைச்சார்ந்த கே.பி. கதிரவவேலும் ஒருங்கிணைக்க உள்ளனர்.


மூலம்[தொகு]

  • தினமணி, 20.01.2013,திருநெல்வேலிப் பதிப்பு, பக்கம் 2.
  • தினமலர், 20.01.2013,திருநெல்வேலிப் பதிப்பு, பக்கம் 11.