உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய விண்கலம் மங்கள்யான் செவ்வாயை நோக்கி ஏவப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், நவம்பர் 5, 2013

இசுரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் பொன்விழா ஆண்டான 2013ஆம் ஆண்டில் செங்கோள் என அழைக்கப்படும் செவ்வாய்க் கோளை நோக்கி இந்தியா தனது முதலாவது மங்கள்யான் எனும் விண்கலத்தை இன்று வெற்றிகரமாக ஏவியுள்ளதை அடுத்து, அமெரிக்கா, உருசியா, ஐரோப்பிய ஒன்றியத்திற்குப்பின் செவ்வாய்க் கோளைச் சென்றடையும் நான்காவது நாடு என்ற வரிசையில் இந்தியா இடம்பிடித்துள்ளது.


செவ்வாய் சுற்றுக்கலன் திட்டம் (Mars Orbiter Mission) அல்லது மங்கள்யான் என அழைக்கப்படும் இந்த விண்கலம் இந்தியாவின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள, ஆந்திரா மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவன் விண்வெளி மையத்தில் இருந்து இன்று பிற்பகல் 2:38 மணிக்கு ஏவப்பட்டது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பி எஸ் எல் வி., சி-25 ராக்கெட் இதனைக் கொண்டு சென்றுள்ளது. அடுத்த இரு வாரங்களில் இந்த கலனின் வட்டப்பாதை படிப்படியாக உயர்த்தப்படும்.


செவ்வாயின் சுற்றுவட்டத்தை அடைவதற்கும் அங்கு அது பரிசோதனைகளை நடத்துவதற்கும் இத்திட்டத்தின் தொழில்நுட்பம் ஒத்துழைக்கும் என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் தலைவர் கூறியுள்ளார். செவ்வாய்க் கோளை அடையும் திறன் இந்தியாவுக்கு உள்ளதா என்பதையும், செவ்வாய் கோளில் உயிர்கள் வாழ வாய்ப்பு, கனிம வளம் மற்றும் மீத்தேன் வாயு உள்ளதா என்பதை ஆய்வு செய்வதுமே இந்த திட்டத்தி்ன் முக்கிய நோக்கங்கள் ஆகும். இதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) 72 மில்லியன் டாலர்கள் (450 கோடி ரூபாய்) செலவு செய்துள்ளது.


இவ்விண்கலம் 300 நாட்கள் வரை, 44 கோடி கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்து 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 இல் செவ்வாயின் சுற்றுவட்டத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாண்டு டிசம்பர் 1 இல் இவ்விண்கலம் புவியீர்ப்பு விசையை உடைத்து புவியை விட்டு வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மூலம்[தொகு]