உள்ளடக்கத்துக்குச் செல்

இந்த மில்லேனியத்தின் மிக நீண்ட சூரிய கிரகணம்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சனவரி 16, 2010


ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கக்கூடிய வருடாந்த நீண்ட சூரிய கிரகணம் நேற்று வெள்ளிக்கிழமை ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் காணக்கூடியதாக இருந்தது.


கங்கண கிரகணம்

இதன்போது சூரியனின் மையப்பகுதியை சந்திரன் மறைத்ததன் விளைவாக, சூரியனின் வெளிவட்டமானது வைர மோதிரம் போல் ஒளித்தது. இது கங்கண கிரகணம் என அழைக்கப்படுகிறது.


இந்தச் சூரிய கிரகணம் மத்திய ஆப்பிரிக்க பகுதியில் முதலில் தெரிய ஆரம்பித்தது. பிறகு படிப்படியாக இந்தக் கிரகணம் கிழக்கு ஆப்பிரிக்கா, தெற்காசியா மற்றும் சீனா என்று நகர்ந்து, கடைசியாக இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அதிகபட்சமாக 11 நிமிடம் அது நீடித்து காணப்பட்டது.


தமிழ்நாட்டில் கங்கண சூரிய கிரகணம் மதுரை, கன்னியாகுமரி, ராமேசுவரம், தனுஷ்கோடியில் முழுமையாகக் காட்சி அளித்தது. பகல் 11.10 மணிக்கு சூரியனை சந்திரன் நிழல் லேசாக மறைக்கத் தொடங்கியது. பிறகு படிப்படியாக சூரியன் வலதுபுறம் மறையத் தொடங்கியது. பிற்பகல் 1.15 மணிக்கு சூரியனின் மையத்தில் சந்திரன் முழு வட்டமாக அமைந்ததைக் காண முடிந்தது. அப்போது பிரகாசமான வைர வளையல் போல சூரியன் காணப்பட்டது.


இந்த முழு கிரகணத்தின் மத்திய கோடு தமிழகத்தில் இராமேசுவரத்தில் இருந்து 7 கி.மீ தாண்டி உள்ள தனுஷ்கோடி நிலபரப்பில் விழுவதால் மிக தெளிவாகக் காணலாம் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவித்தன்படி, தனுஷ்கோடி அருகே முகுந்தராயர்சத்திரம் கடற்கரையில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் சிறப்புக் கண்ணாடி அணிந்து சூரிய கிரகணத்தைப் பார்வையிட்டனர்.


சூரிய கிரகணம் மாலை 3.12 மணிக்கு முடிவடைந்தது.


இத்தகையதொரு மிக நீண்ட சூரியகிரகணம் 3043 ஆம் ஆண்டு வரை மீண்டும் காண முடியாத ஒரு நிகழ்வாக இருக்கும். அடுத்த கங்கண சூரியகிரகணம் 2019ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி நிகழவுள்ளது.

மூலம்

[தொகு]