உள்ளடக்கத்துக்குச் செல்

இரண்டு சூரியன்களைச் சுற்றி வரும் புறக்கோள் கண்டுபிடிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, செப்டெம்பர் 16, 2011

இரண்டு சூரியன்களைச் சுற்றி வரும் புறக்கோள் ஒன்று முதற்தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாசாவின் கெப்லர் தொலைநோக்கி இதனைக் கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க விண்வெளி நிறுவனம் அறிவித்துள்ளது.


கெப்லர்-16 என்ற இரட்டைச் சூரியன்களைச் சுற்றி வரும் கெப்லர்-16பி

கெப்லர் 16பி (Kepler-16b) எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் புறக்கோள் சனிக் கோளைப் போன்று உயிரினங்கள் வாழமுடியாத குளிர்ந்த வளிமப் பெருங்கோள் எனக் கருதப்படுகிறது. இது பூமியில் இருந்து கிட்டத்தட்ட 200 ஒளியாண்டுகள் தூரத்தில் அமைந்துள்ளது.


கெப்லர்-16பி பற்றிய தகவல்கள் இன்றைய சயன்ஸ் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.


இரட்டைச் சூரியன்களைச் சுற்றும் கோள்கள் அண்டத்தில் காணப்படலாம் என முன்னர் வானியலாலர்கள் எதிர்வு கூறியிருந்தாலும், முதற்தடவையாக இப்போது தான் அது உறுதி செய்யப்பட்டுள்ளது. கெப்லர்-16பி கோளின் ஒரு நாள் நிறைவடையும் போது அதற்கு இரண்டு சூரிய மறைவுகள் காணப்படும். ஸ்டார் வோர்ஸ் திரைப்படத்தில் டாட்டூயின் என்ற கோள் ஒன்றில் இருந்து லூக் ஸ்கைவாக்கர் என்ற பாத்திரம் இரட்டைச் சூரியன் மறையும் காட்சியைக் காண்பது காண்பிக்கப்பட்டது. இது இப்போது உண்மையாகியுள்ளது.


இக்கோளின் இரண்டு சூரியன்களும் எமது சூரியனை விடச் சிறியதாகும். இரண்டு சூரியன்களையும் அது 229 நாட்களுக்கு ஒரு முறை 104 மில். கிமீ தூரத்தில் சுற்றுகிறது. இது கிட்டத்தட்ட வெள்ளியின் சுற்று வட்டத்தைப் போன்றதாகும்.


கெப்லர் தொலைநோக்கி 2009 ஆம் ஆண்டில் பூமிக்கு ஒத்த கோள்களைக் கண்டுபிடிப்பதற்காக விண்ணுக்கு ஏவப்பட்டது. கெப்லர் தொலைநோக்கி "கடக்கும்" தொழில்நுட்பத்தில் தங்கியுள்ளது. அதாவது, தனது சூரியனுக்கும் (அல்லது விண்மீன்) புவிக்கும் இடையில் கடக்கும் புறக்கோள்களை இது கண்டுபிடிக்கிறது. விண்மீனில் இருந்து வரும் ஒரு மிகச்சிறிய ஒளி காலமுறை தோறும் தடுக்கப்படுவது, கோள் ஒன்று அதனைச் சுற்றி வருவதாகக் கருதப்படுகிறது.


மூலம்

[தொகு]