இரண்டு பேரடைகளின் மோதுகையாலேயே அந்திரொமேடா பேரடை உருவானது

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, நவம்பர் 26, 2010


எமது பால் வழிக்கு அண்மையில் உள்ள சுருளி நாள்மீன்பேரடையான அந்திரொமேடா (M31)இரண்டு சிறிய நாள்மீன்பேரடைகளின் (galaxy) மோதுகையால் உருவானதென வானியலாளர்கள் அறிவித்துள்ளனர். எவ்வாறு அந்திரொமேடா உருவானது என்பதை கணினி வழி உருவகப்படுத்தல் மூலம் பன்னாட்டு ஆய்வாளர்கள் குழு ஒன்று ஆராய்ந்ததில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.


ஏறத்தாழ ஒன்பது பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டு பேரடைகள் மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆய்வு முடிவுகள் வானியற்பியல் (Astrophysical Journal) என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. கணினி வழி உருவகப்படுத்தல் சீனாவில் உள்ள தேசிய வானியல் அவதானிப்பு நிலையத்திலும், பாரிஸ் அவதான நிலையத்திலும் உள்ள அதி உயர் தொழில்நுட்பம் கொண்ட கணினிகள் மூலம் நடத்தப்பட்டன. விண்மீன்கள், வாயு மற்றும் இருண்ட பொருள் ஆகியவற்றை உருவகப்படுத்த கிட்டத்தட்ட எட்டு மில்லியன் துணிக்கைகளை வானியலாளர்கள் பயன்படுத்தினர்.


இந்த ஆய்வுக்குழுவில் ஒருவரான பிரான்சைச் சேர்ந்த பிரான்சுவா ஹாமர் என்பவர் கருத்துத் தெரிவிக்கையில், “பேரண்டத்துக்கு அருகில் பல பேரடைகளை வானியலாளர்கள் கண்டுபிடித்தாலும், எமக்கு அருகில் உள்ள பேரடைகள் பற்றிய அறிவு போதுமானதாக இல்லை. எமக்கு அருகில் கிட்டத்தட்ட 40 பேரடைகள் உள்ளன. அவற்றில் மிகப்பெரியது பால் வழி, அந்திரொமேடா ஆகியனவாகும்,” என்றார்.


"அந்திரொமேடா மிகப்பெரும் இணைப்பு ஒன்றினால் உருவானதாக பல வானியலாளர்கள் நம்புகின்றனர்," என்றார் பிரான்சுவா ஹாமர். ஆனாலும் இவர்களின் நம்பிக்கை எப்போதும் ஆய்வுக்குள்ளாக்கப்படவில்லை."


”எமது புதிய ஆய்வு மூலம் எமக்கு அருகில் உள்ள பேரடைகள் பற்றிய அறிவைப் புதுப்பிக்க வேண்டியுள்ளது - மேலும் பேரடைகளில் காணப்படும் இருண்ட பொருளின் அளவு குறித்தும் ஆய்வுகளுக்கு உதவும்,” என்றார்.


மூலம்[தொகு]