உள்ளடக்கத்துக்குச் செல்

இராணுவக் கிளர்ச்சியை அடுத்து புர்க்கினா பாசோ அரசு கலைக்கப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, ஏப்பிரல் 17, 2011

மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்க்கினா பாசோவில் கடந்த சில நாட்களாக இடம்பெற்று வரும் இராணுவக் கிளர்ச்சியை அடுத்து அந்நாட்டின் அரசை அரசுத்தலைவர் கலைத்துள்ளார்.


தலைநகர் வாகடூகுவில் நேற்று சனிக்கிழமை முதல் மாலை 7 மணி முதல் அதிகாலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவும் அமுல் படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.


முன்னதாக இராணுவக் கிளர்ச்சியாளர்கள் தமது பொருட்களைக் கொள்ளையடித்துச் செல்வதாகக் குற்றம் சாட்டி தலைநகரின் வர்த்தகர்கள் அரசாங்கக் கட்சியின் தலைமையகத்தைத் தீ வைத்துக் கொளுத்தினர். 45 பேர், சிலர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடனும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. பலர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டிருந்தனர்.


கிளர்ச்சியை அடுத்து அரசுத்தலைவர் பிளைசு சொம்போரே சென்ற வெள்ளியன்று அரசைக் கலைக்க உத்தரவிட்டார். அதனை அடுத்து புதிய இராணுவத் தலைவரை நியமித்தார். அத்துடன் இராணுவக் கிளர்ச்சிக்குக் காரணமாக இருந்த தனது பாதுகாப்பு அதிகாரியையும் பதவியில் இருந்து நீக்கினார். தமக்கு வீட்டு மானியம் வழங்கப்படாமல் இருந்து வந்துள்ளதைச் சுட்டிக் காட்டியே அரசுத்தலைவரின் பாதுகாப்புப் பிரிவு கிளர்ச்சியை ஆரம்பித்திருந்தது. இது பின்னர் வேறு பல முகாம்களிலும் பரவியது. வாழ்க்கைச் செலவு உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, மனித உரிமை மீறல் போன்ற காரணங்களைக் காட்டிப் பலர் தலைநகரை நோக்கிப் படை எடுக்க ஆரம்பித்தனர்.


நிலுவையில் உள்ள மானியத் தொகையை விரைவில் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட பின்னர் நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், உணவுப் பொருட்களின் அதிகரித்த விலைகளால் அரசுத்தலைவர் பிளைசு சொம்போரே நாட்டில் நெருக்கடி நிலையை எதிர்நோக்கியுள்ளார்.


23 ஆண்டுகளுக்கு முன்னர் 1987 ஆம் ஆண்டில் தனது நண்பரான தொமஸ் சங்காரா என்பவரை புரட்சி மூலம் பதவியில் இருந்து அகற்றிய சொம்போரே அதன் பின்னர் நான்கு தடவைகள் அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடைசியாக 2010 நவம்பரில் தேர்தல் இடம்பெற்றிருந்தது. இராணுவத்தினரிடையே இவரது செல்வாக்குக் குறைந்து வருவதாக அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


மூலம்

[தொகு]