உள்ளடக்கத்துக்குச் செல்

புர்க்கினா பாசோ: இராணுவக் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சூன் 5, 2011

மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்க்கினா பாசோவில் அரசுப் படைகள் இராணுவக் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர்.


கடந்த பெப்ரவரி மாதத்தில் இருந்து இராணுவத்தினரின் ஒரு பகுதி நாட்டின் இரண்டாவது பெரிய நகரான போபோ டியோவுலாசோவில் உள்ள இராணுவ முகாமில் அரசுக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுக்கு எதிராக முதற் தடவையாக அரசு ஆதரவுப் படைகள் நேற்றுத் தாக்குதலை மேற்கொண்டன. இராணுவக் கிளர்ச்சியாளர்கள் நாட்டின் வணிக நகரில் உள்ள வர்த்தக நிறுவனங்களைச் சூறையாடி வந்தனர்.


கிளர்ச்சியாளர்கள் அதிக ஊதியம் வேண்டி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அரசுத்தலைவர் பிளைசு சொம்போரே தனது இராணுவத் தளபதியை கடந்த ஏப்ரலில் பதவி நீக்கம் செய்து இராணுவத்தினருக்கு அதிக சலூகைகளை அறிவித்திருந்தார்.


நாட்டில் விலைவாசி அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கிளர்ச்சியில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு ஆதரவு தெரிவித்தும் பல தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தன.


நகரத்தில் தற்போது அமைதி நிலவுவதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். 57 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டதாக நீதி அமைச்சர் ஜெரோமி டிரோரே தெரிவித்தார். 25 பொது மக்களும், எட்டு அரசுப் படையினரும் காயமடைந்தனர்.


23 ஆண்டுகளுக்கு முன்னர் 1987 ஆம் ஆண்டில் தனது நண்பரான தொமஸ் சங்காரா என்பவரை புரட்சி மூலம் பதவியில் இருந்து அகற்றிய சொம்போரே அதன் பின்னர் நான்கு தடவைகள் அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடைசியாக 2010 நவம்பரில் தேர்தல் இடம்பெற்றிருந்தது.

தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]