உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கையர்கள் என நம்பப்படும் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கிறித்துமசு தீவுக்கருகில் மூழ்கியது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சூன் 21, 2012

200 அகதிகளை ஏற்றிச் சென்ற படகொன்று இந்தோனேசியக் கரைக்கப்பால் கிறித்துமசுத் தீவின் வடக்கே மூழ்கியுள்ளதாக ஆத்திரேலிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.


கிறித்துமசுத் தீவு

இன்று மாலை 3 மணியளவில் கிறித்துமசுத் தீவில் இருந்து 110 கடல் மைல்கள் தொலைவில் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த படகைத் தாம் அவதானித்ததாக ஆஸ்திரேலிய சுங்க அதிகாரிகள் அறிவித்திருந்தனர். இப்படகில் 200 பேர் வரையில் இருந்ததாகவும், இவர்கள் இலங்கையர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் இது உறுதி செய்யப்படவில்லை.


மூழ்கிய படகின் மேற்பகுதியில் 40 பேர் வரையில் காணப்பட்டதாக மேற்கு ஆத்திரேலியக் காவல்துறை அதிகாரி கார்ல் ஓ’கலகன் தெரிவித்தார். ஏனையோர் கடலில் காணப்பட்டதாகவும் தெரிவித்த அவர் 75 பேர் வரையில் இறந்திருக்கக்கூடும் எனக் கூறினார்.


படகை நோக்கி இரண்டு இந்தோனேசியக் கடற்படைக் கப்பல்கள் விரைந்துள்ளதாக இந்தோனேசியப் பேச்சாளர் தெரிவித்தார். உயிர்தப்பியோர் ஆத்திரேலியாவுக்கா அல்லது இந்தோனேசியாவுக்கா கொண்டு செல்லப்படுவர் என உறுதியாகக் கூற முடியாதென அவர் கூறினார். இப்படகு இலங்கையில் இருந்தே புறப்பட்டது என்பதை ஆத்திரேலிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


மேற்கு ஆத்திரேலியக் காவல்துறையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.


கடந்த 24 மணி நேரத்தில் மூன்று படகுகள் 238 பேருடன் கிறித்துமசுத் தீவுக்கருகில் ஆத்திரேலிய எல்லைக் காப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டு கிறித்துமசுத் தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.


2010 திசம்பரில் பெண்கள், குழந்தைகளுடன் 50 அகதிகள் கொண்ட படகு கடலில் மூழ்கியது.


மூலம்[தொகு]