உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கை அகதிகளின் புகலிட விண்ணப்பங்களை ஏற்பதை ஆத்திரேலியா இடைநிறுத்தம்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, ஏப்பிரல் 10, 2010

இலங்கை, ஆப்கானித்தான் ஆகிய நாடுகளில் இருந்து வருகின்ற புதிய அரசியல் அகதிகளின் புகலிடக் கோரிக்கைகளை பரிசீலிப்பதை இடைநிறுத்தி வைத்திருப்பதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.


புகலிடம் கோரி வருவோரைக் கடத்தி வருகின்ற ஆட்களின் நடவடிக்கைகளை முறியடிக்கும் நோக்கமாகவே இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் கிறிஸ் எவான்ஸ் தெரிவித்தார். ”இந்த நடவடிக்கையானது ஆட்களை கடத்திவருவோருக்கான வலுவான செய்தியாகும்” என்று அவர் கூறினார்.


அத்துடன் இந்த இரு நாடுகளிலும் தற்போது உள்நாட்டு நிலவரங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதனால், அவை குறித்து மறு ஆய்வு செய்யவேண்டியுள்ளதாகவும் ஆஸ்திரேலியா குறிப்பிட்டுள்ளது.


2007 ஆம் ஆண்டில் தற்போதைய அரசு பதவிக்கு வந்த பின்னர் அகதிகளுடன் வந்த நூற்றுக்கும் அதிகமான படகுகளை ஆஸ்திரேலிய கடற்படை இடைமறித்திருந்தது. இவர்களில் பெரும்பாலானோர் இலங்கை, ஆப்கானிய அகதிகள் ஆவர். இதனால், பிரதமர் கெவின் ரூட் அரசியல் ரீதியாக கடுமையான அழுத்தத்தை எதிர்நோக்கினார் என கான்பராவில் உள்ள பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


ஆஸ்திரேலியாவில் தேர்தல் நடக்கவிருக்கின்ற இந்த ஆண்டில், எப்போதுமே ஒரு சர்ச்சையை கிளப்புகின்ற இந்த விவகாரத்தை தணிப்பதற்கான அரசியல் நோக்கம் கொண்ட நடவடிக்கையாக இது விமர்சிக்கப்படுகின்றது.


இந்த நடவடிக்கை ஆட்களை கடத்திவருவோருக்கான வலுவான செய்தியாகும்.

—கிறிஸ் எவான்ஸ், வெளியுறவு அமைச்சர்

கடந்த புதன்கிழமை அன்று ஆஸ்திரேலியா புகலிடம் கோருவோரைத் தடுத்து வைத்திருக்கும் கிறிஸ்மஸ் தீவுக்கு அப்பால் 70 பேருடன் மூழ்கிய படகு ஒன்றை ஆத்திரேலியக் கடற்படையினர் இடைமறித்ததை அடுத்தே நேற்று இந்த அறிவிப்பை ஆஸத்திரேலியா அறிவித்திருக்கலாம் என நோக்கர்கள் கருதுகின்றனர்.


புதிதாக வரும் படகுகள் திருப்பி அனுப்பபட மாட்டா என்றும், ஆனால் அவர்களின் அகதி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா என்று அமைச்சர் கூறினார்.


மூன்று மாதங்களின் பின்னர் இலங்கையர்களின் நிலைமை தொடர்பாகவும், 6 மாதங்களின் பின்னர் ஆப்கானியர்கள் தொடர்பாகவும் மீளாய்வு செய்யப்படும் என்றும் ஆத்திரேலியா தெரிவித்திருக்கிறது.


ஆத்திரேலியாவின் இந்த முடிவு தொடர்பாக பன்னாட்டு மன்னிப்பு அவை, மற்றும் இந்தோனேசியா ஆகியவை தமது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன. ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் இந்த முடிவினால், தற்போது இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும், பலர் அங்கேயே கால அளவின்றி தொடர்ந்து தரித்திருக்க நேரிடும் என்று அந்த நாடு கவலைப்படுகிறது.

மூலம்

[தொகு]