இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் 2011: யாழ்ப்பாண மாவட்டம் உள்ளிட்ட 65 சபைகளுக்கு தேர்தல்

விக்கிசெய்தி இலிருந்து
யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து ஏனைய செய்திகள்
இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் அமைவிடம்

யாழ்ப்பாண மாவட்டத்தின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

வெள்ளி, சூலை 22, 2011

இலங்கையில் 65 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நாளை சூலை 23 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. ஒரு மாநகரசபை, 9 நகர சபைகள், 55 பிரதேச சபைகளில் தேர்தல்கள் நடைபெறும்.


யாழ்ப்பாண மாவட்டத்தில் வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, சாவகச்சேரி ஆகிய 3 நகர சபைகள், மற்றும் 13 பிரதேச சபைகளுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் 3 இலட்சத்து 74 ஆயிரத்து 30 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். இந்த 16 உள்ளூராட்சி சபைகளுக்காக 201 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.


யாழ்ப்பாண மாவட்டத்தில் வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, சாவகச்சேரி, காரைநகர், ஊர்காவற்துறை, நெடுந்தீவு, வேலணை, வலிகாமம் மேற்கு, வலிகாமம் வடக்கு, வலிகாமம் தென்மேற்கு, வலிகாமம் தெற்கு, வலிகாமம் கிழக்கு, வடமராட்சி தென்மேற்கு, பருத்தித்துறை, சாவகச்சேரி, நல்லூர் ஆகிய 16 சபைகளுக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிளைபள்ளி, கராச்சி, பூநகரி ஆகிய மூன்று சபைகளுக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் பிரதேச சபைக்கும், அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு, திருக்கோவில் ஆகியவற்றுக்கும், திருகோணமலை மாவட்டத்தில் சேருவில, கந்தளாய், திருகோணமலை பட்டினமும் சூழலும், குச்சவெளி ஆகிய சபைகளுக்கும் தேர்தல்கள் நடைபெறுகின்றன.


நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் இன்று காலை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. தேர்தலுக்கான சுவரொட்டிகள் நேற்றுடன் அகற்றப்படவேண்டும் என தேர்தல் ஆணையாளர் அறிவித்திருந்தபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் சுவரொட்டிகள் அனைத்தும் அகற்றப்பட்ட நிலையில், அரச ஆதரவுச் சுவரொட்டிகள் எதுவும் அகற்றப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


பாரியளவில் சேதமடைந்து காணப்படும் வீதிகள் மற்றும் பொதுப் போக்குவரத்து சேவையின் குறைபாடு போன்ற காரணங்களினால் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களின் பெரும்பாலான வாக்காளர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மீறப்படலாம் என சுயாதீன தேர்தல் கண்காணிப்பு அமைப்பு கபே அறிவித்துள்ளது. மாவட்ட செயலாளர்களுக்கும் கட்சி தலைவர்களுக்குமிடையே கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.


இதற்கிடையில், ஒரு போதும் இல்லாத வகையில் வடக்கின் தேர்தல் பிரசாரப் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்ற அதேவேளை ஆயுதக் குழுக்கள் பகிரங்கமாக உலா வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக் காட்டியுள்ளார். வடக்கில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவது அவசியமாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் அரசாங்கம் நடத்தி வரும் பேச்சுவார்த்தை, இந்தியா வலியுறுத்தி வருகின்ற தீர்வு என்பவற்றின் வெற்றிகள் இந்தத் தேர்தலில் நடத்தப்படுகின்ற வழிமுறைகளிலேயே தங்கியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.


கடந்த மார்ச் மாதத்தில் இலங்கை முழுவதும் நடத்தப்பட்ட உள்ளூராட்சி சபை தேர்தல்களின் போது 452 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாணம் உட்பட 65 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. அவற்றுக்கான தேர்தல்களே நாளை நடைபெறுகிறது.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]