உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கை தோட்டத்தொழிலாளர்கள் சம்பள உயர்வு போராட்டம் முடிவு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, செப்டம்பர் 13, 2009, கொழும்பு:


இலங்கையில் பெருந்தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் தோட்ட முதலாளிகள் சம்மேளனத்துடன் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக முக்கிய தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்ததை இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் பெருந்தோட்டத்துறை தொழிற்சங்கக் கூட்டமைப்பு ஆகிய ஏனைய முக்கிய சங்கங்கள் நிராகரித்துள்ளன.


இலங்கை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 500 ரூபாய்கள் வழங்கப்பட வேண்டும் என்று கோரி முக்கிய மூன்று தொழிற்சங்கங்கள் இணைந்து ஒத்துழையாமை போராட்டத்தை நடத்தி வந்தன. இந்த சம்பள உயர்வு குறித்து பல சுற்றுக்கள் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தைகளை இந்த தொழிற்சங்கங்கள் நடத்தி வந்தபோதிலும், அவை தோல்வியிலேயே முடிந்திருந்தன.


இருந்த போதிலும், சனிக்கிழமை முதலாளிமார் சம்மேளனத்துடன் நடத்திய பேச்சு ஒன்றில் தாம் 405 ரூபாய் நாளாந்த சம்பளத்துக்கு இணக்கம் கண்டதாக அந்த மூன்று தொழிற்சங்கங்களில் ஒன்றான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரான ஆர். யோகராஜன் தெரிவித்தார்.


ஆனால், இந்த இணக்கத்தை ஏற்க முடியாது என்று ஏனைய இரு சங்கங்களான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் பெருந்தோட்டத்துறை தொழிற்சங்கக் கூட்டமைப்பு ஆகியன கூறியிருக்கின்றன.


அடிப்படைச் சம்பளம் 290 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதோடு வேலை வரவுக்கான விசேட கொடுப்பனவாக 85 ரூபாவும் மேலதிக கொடுப்பனவாக 30 ரூபாவும் வழங்கப்படவுள்ளது.


சம்பள அதிகரிப்பு தொடர்பான ஒப்பந்தம், 2011 மார்ச் மாதம் வரை அமுலில் இருக்கும். 2009 ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளதோடு ஏப்ரல் மாதம் முதல் சம்பள நிலுவை வழங்கவும் முதலாளிமார் சம்மேளனம் இணங்கியுள்ளது.


தோட்டத் தொழிலாளர்கள் தமது ஒத்துழையாமை போராட்டத்தை கைவிட்டு கடமைக்குத் திரும்புமாறு இ. தொ. கா கோரியுள்ளது. இதன்படி தொழிலாளர்கள் நேற்று முதல் கடமைக்கு திரும்பி வருவதாகவும் இன்று முதல் தோட்டங்களில் பணிகள் வழமைக்கு திரும்பும் எனவும் பிரதி அமைச்சர் மு. சிவலிங்கம் கூறினார்.

தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]