உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கை படகு அகதிகள் 5 பேர் ஆத்திரேலியக் கடற்பரப்பில் மூழ்கி உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், மே 10, 2010

ஆத்திரேலியாவில் தஞ்சம் கோர வந்த இலங்கைத் தமிழ் அகதிகளை ஏற்றி வந்த படகொன்று இந்தியப் பெருங்கடலில் மூழ்க ஆரம்பித்ததை அடுத்து உதவி நாடி கடலில் குதித்த 5 அகதிகள் கடலில் மூழ்கி இறந்துள்ளதாக ஆத்திரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


உலக வரைபடத்தில் கொக்கோசு (கீலிங்) தீவுகள்
கொக்கோசு (கீலிங்) தீவுகள்

15 பிள்ளைகள் உட்பட 60 பேருக்கு மேல் இப்படகில் பயணித்ததாகவும், கொக்கோசு தீவுகளில் இருந்து 160 கடல் மைல்கள் மேற்கே இப்படகு பழுதடைந்து நின்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.


சென்ற புதன்கிழமை (மே 5) அன்று ஆத்திரேலியச் சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் பிரிவினர் இப்படகைக் கண்டு அது பற்றி ஆத்திரேலிய கடலோரப் பாதுகாப்பு ஆணையத்துக்கு அறிவித்ததாகவும், பின்னர் அப்படகு காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


கொக்கோசு தீவுகளில் இருந்து 270 கிலோமீட்டர் வட மேற்கே விமானப்படையின் விமானங்கள் தேடுதலில் ஈடுபட்டன.


அடுத்த நாள் மாலை படகு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதன் எந்திரம் பழுதடைந்து இயங்காமல் நின்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அப்பகுதியில் நின்றிருந்த நான்கு சரக்குக் கப்பல்கள் உதவிக்கு விரைந்தன. பஸ்டோஜ்னா என்ற இரசியக் கப்பலில் படகில் இருந்த 8 பேர் ஏற்றப்பட்டனர். ஏனையோர் படகிலேயே இருந்தனர். படகு பின்னர் கொக்கோசு தீவுகளுக்கு இழுத்து வரப்பட்டது.


மூன்று நாட்களுக்கு முன்னர் ஐந்து ஆண் பயணிகள் உயிர்காப்பு ஆடைகளை அணிந்த வண்ணம் உதவி நாடி கடலில் குதித்ததாக படகில் பயணம் செய்த ஏனைய அகதிகள் தெரிவித்தனர்.


சில உயிர்காப்பு ஆடைகள், மற்றும் டயர்கள் சில அவ்விடத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆத்திரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களைத் டேடும் பணி நிறைவடைந்து விட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.


மீட்கப்பட்ட அகதிகள் அனைவரும் அருகில் உள்ள கிறிஸ்துமஸ் தீவில் உள்ள ஆத்திரேலிய அகதி முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று ஆத்திரேலிய அரசு அறிவித்துள்ளது.


இப்படகு இலங்கையில் இருந்து நேரடியாகப் பயணித்ததாக நம்பப்படுகிறது.

மூலம்

[தொகு]