உள்ளடக்கத்துக்குச் செல்

ஈரானிய எண்ணெய் கப்பல் சீன சரக்கு கப்பலுடன் மோதியதில் 32 பேரை காணவில்லை

Checked
விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சனவரி 7, 2018

கீழை சீனக் கடல்

ஈரானிய எண்ணெய் கப்பல் கீழை சீனக்கடலில் சீன சரக்கு கப்பலுடன் மோதியதில் எண்ணெய் கப்பலைச் சேர்ந்த ஊழியர்கள் 32 பேரை காணவில்லை. காணாமல் போனவர்களில் 30 பேர் ஈரானியர் இருவர் வங்காள தேசத்தவர். இம்மோதலால் ஈரானிய எண்ணெய் கப்பல் எரிகிறது.


பனாமாவில் பதிவு செய்யப்பட்ட ஈரானிய கப்பல் சான்சி ஈரானிலிருந்து தென் கொரியாவுக்கு 136,000 டன் பாறை எண்ணெயை ஏற்றிக்கொண்டு வந்தது. இந்த எண்ணெய் 1 மில்லியன் பீப்பாய் எண்ணெய்க்கு சமமானது. உலக எண்ணெய் நிலவரப்படி இது 60 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையது. சான்சி 2008ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.


சான்சி ஆங்காங்கைச் சேர்ந்த சிஎப் கிரிசுடல் கப்பலுடன் சாங்காய் நகரக்கு 160 நாட்டிகல் மைல் தொலைவில் மோதியது என சீன போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்தது. காணாமல் போன 32 ஊழிர்களைப்பற்றி எத்தகவலும் இல்லை. சரக்கு கப்பலில் இருந்த 21 பேரும் மீட்கப்பட்டு விட்டார்கள் என்றும் அவர்கள் அனைவரும் சீனர்கள் என்றும் சீன போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்தது.

எண்ணெய் கப்பல் (மாதிரி)

எட்டுக் கப்பல்களை மீட்பு பணியில் ஈடுப்படுத்தி உள்ளதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. தென் கொரியாவும் கடலோர காவல் கப்பல் ஒன்றையும், உலங்கு ஊர்தி ஒன்றையும் மீட்பு பணியில் ஈடுப்படுத்தி உள்ளது.


ஆங்காங்கில் பதிவு செய்யப்பட்ட சிஎப் கிரிசுடல் 64,000 டன் தானியங்களுடன் அமெரிக்காவிலிருந்து சீனாவின் குவாங்டோங் மாகாணத்துக்கு மோதலின் போது பயணித்துக்கொண்டிருந்தது. இக்கப்பல் 2011லில் கட்டப்பட்டது. சான்சி ஈரானின் கார்க் தீவிலிருந்து தென் கொரியாவின் டாசன் நகருக்கு வந்து கொண்டிருந்தது.


இதற்கு முன்பு 2002இல் எசுப்பானியாவின் கடல் பகுதியில் 77,000 டன் பாறை எண்யெய் ஏற்றி வந்த கப்பல் மோதியதே பெரிய விபத்தாக இருந்தது. இதனால் 63,000 டன் எண்ணெய் அட்லாண்டிக் கடலில் கலந்தது.


மூலம்

[தொகு]