உள்ளடக்கத்துக்குச் செல்

ஈஸ்டர் தீவு விடுதியில் இருந்து ராப்பா நூயி குடும்பம் வெளியேற்றப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், பெப்பிரவரி 7, 2011

ஈஸ்டர் தீவில் சொகுசு விடுதி ஒன்றைக் கடந்த ஆண்டில் இருந்து ஆக்கிரமித்திருந்த பழங்குடிக் குடும்பம் ஒன்றைக் காவல்துறையினர் பலவந்தமாக வெளியேற்றினர்.


ஈஸ்டர் தீவில் உள்ள மோவாய்கள் அதன் சிறப்பு

தமது மூதாதையர் பல நூற்றாண்டுகளாக இவ்விடங்களில் வாழ்ந்து வந்ததாகவும், அவர்களை சட்டவிரோதமாக வெளியேற்றிவிட்டு அங்கு சுற்றுலா விடுதி கட்டப்பட்டதாகவும் ராப்பா நூயி மக்கள் தெரிவிக்கின்றனர். பல மாதங்களாக இவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆகத்து மாதத்தில் ஹங்காரோ ஈக்கோ கிராமத்தையும் மருத்து நீரூற்றையும் இட்டோராங்கி என்ற பழங்குடிக் குழுவினர் ஆக்கிரமித்துள்ளனர்.


1990களில் செயிஸ் குடும்பம் என்ற செல்வாக்குள்ள முதலீட்டு நிறுவனம் ஒன்று இந்த விடுதியை சிலி அரசிடம் இருந்து விலைக்கு வாங்கியது. ஆனால் அவ்விடம் தமது மூதாதைகளிடம் இருந்து ஏமாற்றிப் பறிக்கப்பட்ட நிலம் என பழங்குடியினர் வாதிட்டு வருகின்றனர்.


சுமார் 50 சிலி காவல்துறையினர் விடுதியினுள் புகுந்து அங்கு மீதமிருந்த ஐந்து பழங்குடியினரைக் கைது செய்தனர் என இக்குழுவுக்காக வாதாடும் வழக்கறிஞர் ரொட்ரிகோ கோமசு தெரிவித்தார். "காவல்துறையினரின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும்" கோமசு தெரிவித்தார்.


கடந்த டிசம்பர் மாதத்தில் இடம்பெற்ற காவல்துறையினரின் தாக்குதலில் 20 பழங்குடியினர் காயமடைந்தனர். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான பேச்சாளர் ஜேம்ஸ் அனாயா ராப்பா நூயி மக்கள் பற்றிய தமது கரிசனையை சென்ற சனவரியில் வெளியிட்டிருந்தார்.


1888 ஆம் ஆண்டில் சிலி நாட்டுடன் இணைக்கப்பட்ட இத்தீவு யுனெஸ்கோவினால் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.


ராப்பா நூயி என்பது ஈஸ்டர் தீவின் உள்ளூர் பெயராகும். இது சிலியின் மேற்குக் கரையில் இருந்து 3,200 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. 4,000 பேர் வசிக்கும் இத்தீவில் உள்ள மோவாய் (moai) என அழைக்கப்படும் பல நினைவுச் சின்னங்கள் இதன் சிறப்பாகும்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]