உள்ளடக்கத்துக்குச் செல்

ஈஸ்டர் தீவில் காவல்துறையினருக்கும் பழங்குடியினருக்கும் இடையே மோதல்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, திசம்பர் 4, 2010

பசிபிக் தீவான ஈஸ்டர் தீவில் சிலியக் காவல்துறையினருக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலகத்தில் குறைந்தது 25 பேர் படுகாயமடைந்தனர்.


ஈஸ்டர் தீவு

இவ்வாண்டு ஆரம்பத்தில் உள்ளூர் கட்டிடங்களில் சட்டவிரோதமாகக் குடியேறிய உள்ளூர் பழங்குடி மக்களைக் கலைப்பதற்காக அவர்கள் மீது காவல்துறையினர் தாக்கியதாக உள்ளூர்ப் பொதுமக்கள் தெரிவித்தனர்.


தமது மூதாதையர் பல நூற்றாண்டுகளாக இவ்விடங்களில் வாழ்ந்து வந்ததாகவும், அவர்களை வெளியேற்றிவிட்டு அங்கு கட்டிடங்கள் கட்டப்பட்டதாகவும் ராப்பாநூயி மக்கள் தெரிவிக்கின்றனர்.


1888 ஆம் ஆண்டில் சிலி நாட்டுடன் இணைக்கப்பட்ட இத்தீவு யுனெஸ்கோவினால் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.


காவல்துறையினரின் நடவடிக்கை இன்று காலையில் ஆரம்பிக்கப்பட்டது. அங்கிருந்த மக்கள் வெளியேற மறுத்ததைத் தொடர்ந்து அவர்கள் மீது துப்பாக்கித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 17 காவல்துறையினரும் 8 பொது மக்களும் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பலர் கைது செய்யப்பட்டனர். காவல்துறையினர் ரப்பர் குண்டுகளையும் கண்ணீர்ப் புகையும் பயன்படுத்தினர். ஆனாலும், தமது தரப்பில் 19 பேர் காயமடைந்ததாகவும், காவல்துறையினர் எவரும் காயமடையவில்லை என உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.


ராப்பா நூயி என்பது ஈஸ்டர் தீவின் உள்ளூர் பெயராகும். இது சிலியின் மேற்குக் கரையில் இருந்து 3,200 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. 4,000 பேர் வசிக்கும் இத்தீவில் உள்ள மோவாய் (moai) என அழைக்கப்படும் பல நினைவுச் சின்னங்கள் இதன் சிறப்பாகும்.


மூலம்

[தொகு]