உயிரினம் வாழக்கூடிய புறக்கோள் ஒன்றை வானியலாளர்கள் கண்டுபிடித்தனர்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, அக்டோபர் 1, 2010


எமது பூமியைப் போன்ற மனித இனம் வாழக்கூடிய இயல்புகளைக் கொண்ட ஒரு புறக்கோள் ஒன்றை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கிளீசி 581 உம் அதன் கோள்களும்

கிளீசு 581ஜி (Gliese 581g) என்ற இந்தப் புறக்கோள் எமது பூமியில் இருந்து கிட்டத்தட்ட 20.5 ஒளியாண்டுகள் (193 திரில்லியன் கிமீ) தூரத்தில் துலா என்ற விண்மீன் குழுமத்தில் காணப்படுகிறது. திரவ நீர் இருக்கக்கூடிய வெப்பநிலையை அதன் மேற்பரப்பு கொண்டிருக்கும் என அறிவியலாளர்கள் கருதுகின்றனர். அத்துடன் அது வளிமண்டலத்தையும் கொண்டிருக்கும் என அவர்கள் கூறுகின்றனர்.


ஹவாயில் உள்ள கெக் தொலைநுண்காட்டி மூலமாகக் கண்டுபிடிக்கப்பட்ட இத்தகவல்கள் வானியற்பியல் அறிவியல் இதழில் வெளிவந்துள்ளது.


கலிபோர்னியா பல்கலைக்கழகம், மற்றும் வாசிங்டன் கார்னர்ஜி கல்வி நிறுவனம் ஆகியவற்றின் ஆய்வாளர்கள் கடந்த 11 ஆண்டுகளாக இப்புறக்கோளின் கிளீசு 581 என்ற சூரியனை ஆராய்ந்து வருகின்றார்கள். இந்த விண்மீனைச் சுற்றி பல கோள்கள் சுற்றி வருவதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவற்றில் ஒன்றே எமது பூமியை ஒத்த கிளீசு 581ஜி ஆகும்.


அண்மையில் இவ்வாய்வாளர்கள் இரண்டு புதிய வேற்றுலகங்களைக் கண்டறிந்துள்ளனர். இவற்றுடன் கிளீசு 581 ஐக் குறைந்தது 6 கோள்கள் சுற்றிவருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


கிளீசு 581ஜி பூமியை விட மூன்று முதல் நான்கு மடங்கு திணிவு கூடியது என்றும் அது அதன் சூரியனைச் சுற்றிவர 37 நாட்கள் எடுக்கின்றது. பாறைகளுடன் கூடிய இந்தக் கோள் வளிமண்டலத்தைக் கொண்டிருக்கத் தேவையான ஈர்ப்பைக் கொண்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. இதன் சராசரி மேற்பரப்பு வெப்பநிலை -12செல். முதல் -31செல். வரை என மதிப்பிடப்பட்டுள்ளது.


ஆனால் பூமியைப் போல் அல்லாது, இந்த வேற்றுலகத்தின் ஒரு பக்கம் எப்போது அதன் சூரியனின் பக்கம் உள்ளது. மற்றைய பக்கம் எப்போது இருட்டாகவே உள்ளது. எனவே இந்த இரு பக்கத்திற்கும் இடையில் உள்ள நிழலும் வெளிச்சமுமாக உள்ள பகுதியில் உயிரினம் செழித்து வாழக்கூடிய சான்றுகள் காணப்படுகின்றன.


விண்மீன் ஒன்றைச் சுற்றி வரும் புறக்கோள் ஒன்று முதற்தடவையாக பத்தாண்டுகளுக்கு முன்னரேயே கண்டுபிடிக்கப்பட்டது. அத பின்னர் கிட்டத்தட்ட 500 வரையான புறக்கோள்கள் எமது சூரிய மண்டலத்துக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை ஜுப்பிட்டர் மாதிரியான வாயுக்கோள்கள் ஆகும்.

மூலம்