உலகின் மிக ஆழமான கடலான மரியானா அகழியில் 'நுண்ணுயிர்கள் மலிந்து காணப்படுகின்றன'

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

திங்கள், மார்ச் 18, 2013

உலகின் மிக ஆழமான கடல் பகுதியில் நுண்ணுயிர்கள் மலிந்து காணப்படுவதாக அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


மரியானா அகழி

பசிபிக் பெருங்கடலில் உள்ள மரியானா அகழியில் 11 கிமீ (7 மைல்கள்) ஆழத்தில் நுண்ணுயிர்களின் செயற்பாடுகள் மிக அதிகளவில் உள்ளதாக பன்னாட்டு ஆய்வாளர் குழு ஒன்று கண்டறிந்துள்ளது. இது குறித்த ஆய்வறிக்கை நேச்சர் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.


நிலத்துக்கடியில் உள்ள இத்தகைய அகழி உயிரினம் வாழ்வதற்கு தகுந்தவை அல்லவென முன்னர் கருதப்பட்டு வந்தது. ஆனாலும், உறைபனி வெப்பநிலை, உயர் அமுக்கம், முழுமையான இருள் போன்ற சூழலிலும் சில நுண்ணுயிர்கள் வாழ்கின்றன என்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.


2010 ஆம் ஆண்டில் ஆளில்லா நீர்மூழ்கி ஒன்றை அறிவியலாளர்கள் மரியானா அகழியின் ஆழ்கடலுக்கு அனுப்பி அங்கிருந்து இருண்ட படிவுகளின் மாதிரிகளைச் சேகரித்திருந்தார்கள். இம்மாதிரிகளில் காணப்பட்ட ஒக்சிசனின் அளவு அங்கு நுண்ணுயிர்கள் பெருமளவு வாழ்வதற்கு ஏற்றனவாக இருந்தது.


ஸ்கொட்லாந்து கடலியல் அறிவியல் கழகத்தைச் சேர்ந்த ராபர்ட் துர்னேவித்சு இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், "இந்த நுண்ணுயிர்கள் எம்மைப் போன்றே சுவாசிக்கின்றன. இந்த ஒக்சிசன் நுகர்வு இந்த நுண்ணுயிர்களின் நடவடிக்கைகளை அறியும் ஒரு மறைமுக அளவீடு," எனக் குறிப்பிட்டார்.


மரியானா அகழியில் ஆழ்கடலுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பிரபல ஆங்கிலத் திரைப்பட இயக்குனர் ஜேம்ஸ் கேமரன் தனியொருவராகச் சென்று திரும்பியிருந்தார். தாம் அங்கு கண்டறிந்த அறிவியல் தகவல்களை அண்மையில் அவர் பகிர்ந்து கொண்டிருந்தார்.


10,924 மீட்டர்கள் ஆழமான மரியானா அகழி பசிபிக் பெருங்கடலில் மரியானா தீவுகளுக்குத் தெற்கிலும், கிழக்கில் குவாமுக்கு அருகிலும் அமைந்துள்ளது.


மூலம்[தொகு]

Bookmark-new.svg