உள்ளடக்கத்துக்குச் செல்

எகிப்தின் இசுரேலியத் தூதரக முற்றுகையில் மூவர் உயிரிழப்பு, ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயம்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, செப்டெம்பர் 11, 2011

எகிப்தியத் தலைநகர் கெய்ரோவில் உள்ள இசுரேலியத் தூதரகத்தை கிளர்ச்சியாளர்கள் கடந்த வெள்ளி இரவு முற்றுகையிட்டு தூதரகத்தின் சுற்றுச் சுவரை உடைத்து உள்ளே நுழைந்து கட்டிட அலுவலக அறைகளில் ஆவணங்களை எரித்தும், கிழித்து எறிந்தும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் கலகக் கட்டுப்பாட்டு காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் எகிப்திய சுகாதார அமைச்சகம் கூறுகிறது.


கடந்த மாதம் 18ம் தேதி, இசுரேல்- எகிப்து எல்லையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், எகிப்தியக் காவல்துறையைச் சேர்ந்த ஐந்து பேர் கொல்லப்பட்டனர். இதனால், ஆத்திரமடைந்த எகிப்து நாட்டின் கிளர்ச்சியாளர்களே நேற்று முன்தினம், கெய்ரோவில் உள்ள இசுரேல் தூதரகத்தை முற்றுகையிட்டனர். இவர்கள் தூதரக அதிகாரிகளை, நாட்டை விட்டு வெளியேறும்படி வற்புறுத்தினர்.


எகிப்து ராணுவத்தினரும், காவல்துறையினரும் கவச வாகனங்களுடன் வந்து, கிளர்ச்சியாளர்களை அடித்து விரட்டினர். இந்தச் சம்பவத்தில், மூன்று பேர் கொல்லப்பட்டனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். கட்டிடத்துக்குள் சிக்குண்டிருந்த இசுரேலிகள் ஆறு பேரை எகிப்திய கமாண்டோக்கள் மீட்டிருந்தனர். இசுரேல் நாட்டின் விமானப்படை விமானம் மூலம், தூதரக அதிகாரிகளும், அவர்களது குடும்பத்தினரும் இசுரேலுக்குப் பாதுகாப்பாக அனுப்பப்பட்டனர்.


இசுரேலுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள இரண்டு அரபு நாடுகளில் எகிப்தும் ஒன்று. முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இத்தனை காலமும் எகிப்தில் இசுரேலுக்கு எதிரான உணர்வலைகள் எழும்போது அவற்றுக்கு ஒசுனி முபாரக் அணைபோட்டு வந்தார். ஆனால் தற்போது முபாரக் பதவியில் அகற்றப்பட்டதும் அந்த உணர்வு கிளர்ந்தெழுந்து வெளிப்பட ஆரம்பித்துள்ளது.


மூலம்[தொகு]