எகிப்தின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் கமால் கன்சூரி நியமனம்

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

சனி, நவம்பர் 26, 2011

எகிப்திய இராணுவப் பேரவை அந்நாட்டில் புதிய அரசாங்கமொன்றை அமைக்கும் முகமாக முன்னாள் பிரதமர் கமால் கன்சூரியைப் புதிய பிரதமராக நியமித்துள்ளனர்.


இதற்கு முன் இராணுவத்தால் நியமிக்கப்பட்ட இடைக்கால அரசின் பிரதமர் யெசாம் ஷரஃப்பின் அமைச்சரவை அங்கு கடந்த சில நாட்களாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை அடுத்து கடந்த வாரம் தமது அரசைக் கலைத்திருந்தது.


புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள கன்சூரி முன்னாள் தலைவர் ஒஸ்னி முபாரக்கின் அரசாங்கத்தில் 1996-ம் ஆண்டு முதல் 1999 வரை பிரதமராகப் பதவியிலிருந்தவர். முபாரக்கின் அமைச்சரவையில் முக்கிய அங்கம் வகித்த கன்சூரி, அரசுக்கு எதிராக மக்கள் புரட்சி ஏற்பட்டபோது, முபாரக்கிடமிருந்து விலகினார். இவர் ஒரு பொருளாதார நிபுணரும் ஆவார். தனது பதவிக் காலத்தின்போது பன்னாட்டு செலாவணி நிதியம், உலக வங்கி ஆகிய அமைப்புகளுடனான எகிப்தின் உறவை கன்சூரி மேம்படுத்தினார்.


இதனிடையே இராணுவ அரசிற்கு எதிராக நடக்கும் போராட்டம் தொடர்ந்து ஒரு வாரத்தை எட்டியுள்ளது. இதுவரை இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் 41 பேர் வரை பலியாகியுள்ளனர். 3 ஆயிரம் பேர் வரை காயமடைந்துள்ளனர். இராணுவம் ஆட்சியைப் பொது மக்களிடம் வழங்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டம் நடத்துவர் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று ஒரு மில்லியன் மக்களை ஒன்று கூடும் படி அழைப்பு விடுத்திருந்தனர்.


இந்நிலையில் எகிப்தில் எதிர்வரும் வாரம் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. திங்கட்கிழமை ஆரம்பமாகவிருக்கும் இத்தேர்தல்களை ஒத்திப் போடுமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரி வருகின்றனர்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]

Bookmark-new.svg