எகிப்தில் கிறித்தவத் தேவாலயம் மீது தாக்குதல், 21 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

சனி, சனவரி 1, 2011

வடக்கு எகிப்திய நகரான அலெக்சாந்திரியாவில் கிறித்தவத் தேவாலயம் ஒன்றிற்கு வெளியே கார்க் குண்டு ஒன்று வெடித்ததில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டு, பலர் காயமடைந்தனர். புத்தாண்டு ஆரம்பமான சற்று நேரத்தின் பின்னர் நள்ளிரவில் அல்-கிடிசீன் தேவாலயத்தில் இரவு நேர ஆராதனை முடிந்து வெளியே வந்தோர் மீதே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


எகிப்தில் அலெக்சாந்திரியா நகரம்

தாக்குதலின் பின்னர் அங்கிருந்த கிறித்தவர்கள் உள்ளூர் இசுலாமியர்களுடனும், காவல்துறையினருடனும் கலகத்தில் ஈடுபட்டனர் என்றும், அருகில் உள்ள இசுலாமியப் பள்ளிவாசல் ஒன்றின் மீது கற்களை எறிந்து தாக்கினர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மசூதியினுள் நுழைந்த சிலர் அங்கிருந்த புத்தகங்களை எடுத்து வீதிகளில் எறிந்ததாக அசோசியேட்டட் பிரசு செய்தியாளர் தெரிவிக்கிறார். காயமடைந்தோரில் எட்டுப் பேர் முஸ்லிம்கள் என அதிகாரபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


எகிப்தில் தேவாலயங்கள் மீது அண்மைக்காலத்தில் தாக்குதல்கள அதிகரித்துள்ளதாக அலெக்சாந்திரியாவின் நகர முதல்வர் ஜெனரல் அடெல் லபீப் எகிப்தியத் தொலைக்காட்சிக்குத் தெரிவித்துள்ளார். கார்க்குண்டு சற்று நேரம் கழித்து வெடித்திருந்தால் இன்னும் பலர் இறந்திருப்பார்கள் என உள்ளூர் பாதிரியார் ஒருவர் தெரிவித்தார்.


இன்றைய தாக்குதல் யாரால் நடத்தப்பட்டது என அறிவிக்கப்படவில்லையாயினும், ஈராக்கின் அல்-கைடா என அழைக்கப்படும் ஒரு குழு எகிப்திய கொப்ட்டிக் கிறித்தவர்கள் அச்சுறுத்தல்களை விடுத்து வந்துள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் எகிப்தில் கொப்டிக் பழமைவாத கிறித்தவர்கள் 10 விழுக்காட்டினர் உள்ளனர்.


மூலம்

Bookmark-new.svg