எகிப்தில் மக்கள் போராட்டத்தை அடுத்து அரசைக் கலைத்தார் முபாரக்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சனவரி 29, 2011

கடந்த சில நாட்களாக எகிப்தில் இடம்பெற்ற அரசு எதிர்ப்புப் போராட்டங்களை அடுத்து அந்நாட்டு அரசைக் கலைக்க அரசுத்தலைவர் ஒசுனி முபாரக் உத்தரவிட்டுள்ளார். புதிய அமைச்சரவை இன்று சனிக்கிழமை அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.


வீதிகளில் இறங்கி மக்கள் போராட்டம் (சனவரி 25)
அதிபர் ஒஸ்னி முபாரக்

கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பமான அரசு எதிர்ப்புப் போராட்டங்களில் இதுவரையில் 26 பேர் உயிரிழந்தும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தும் உள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் தலைநகர் கெய்ரோவிலும், மற்றும் பல நகரங்களிலும் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.


ஆளும் என்டிபி கட்சியின் தலைமை அலுவலகத்தைத் தீவைத்துக் கொளுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள், அரசுத் தொலைக்காட்சி, மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சு ஆகியவற்றையும் முற்றுகை இட்டனர்.


அரசுத்தலைவர் ஒஸ்னி முபாரக்கைப் பதவி விலகுமாறும் அரசைக் கவிழ்த்து புதிய தேர்தலை நடத்துமாறும் கோரியே ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. சித்திரவதை, வறுமை, ஊழல் மற்றும் வேலைவாய்ப்பின்மை என்பவற்றால் தாம் விரக்தியடைந்திருப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.


ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கையைத் தாம் புரிந்து கொள்வதாகவும், ஆனாலும் எகிப்தின் திரத்தன்மையை இழக்கத் தாம் தயாராக இல்லை என அதிபர் முபாரக் நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றுகையில் தெரிவித்தார். தற்போதுள்ள அரசைப் பதவி விக்லகக் கோரியுள்ளதாகவும், சனிக்கிழமை அன்று புதிய அரசை அறிவிப்பேன் என்றும் அவர் கூறினார்.


"முபாரக் பதவியில் இருந்து விலக வேண்டும் அல்லது அவர் மேலும் பிரச்சினைக்குள்ளாவார்," என ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் கூறினார். ஒரு சில வாரங்களுக்குள் துனீசியாவின் அரசைக் கவிழ்த்த அந்நாட்டு மக்களின் ஆர்ப்பாட்டங்களினால் உந்தப்பட்ட எகிப்தியர்களும் அரசாங்கம் கவிழும் வரை வீதிகளிலேயே இருக்கப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.


முன்னதாக அரசாங்கம் ஆர்ப்பாட்டங்களுக்குத் தடைவிதித்திருந்த நிலையில் எகிப்தின் மிக முக்கிய நெருங்கிய நாடான அமெரிக்கா ஆர்ப்பாட்டங்கள் மீதான தடையைத் தளர்த்துமாறு அழைப்பு விடுத்துள்ளது.


நேற்று நள்ளிரவுக்குச் சற்றுப் பின்னர் தலைநகரின் தாகிர் என்ற மத்திய பகுதியில் கிட்டத்தட்ட 20 இராணுவ வாகனங்கள் குவிக்கப்பட்டதாகவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் சிதறி ஓடியதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தியாளர் தெரிவித்திருக்கிறார். நேற்று மாலை 1800 முதல் இன்று காலை 0700 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும், மக்கள் அதனைப் பொருட்படுத்தவில்லை.


மூலம்[தொகு]

விக்கிப்பீடியா
விக்கிப்பீடியா
விக்கிப்பீடியாவில் இத்தலைப்புக் குறித்து மேலும் கட்டுரைகள் உள்ளன: