எகிப்து கால்பந்து அரங்க மோதல்: 21 பேருக்கு மரணதண்டனை வழங்கித் தீர்ப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சனவரி 26, 2013

2012 பெப்ரவரியில் இரண்டு எதிரணிக் கால்பந்து ரசிகர்களிடையே இடம்பெற்ற மோதலில் 74 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்ட 21 பேருக்கு எகிப்திய நீதிமன்றம் ஒன்று மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.


இத்தீர்ப்பு அறிவிக்கப்பட்டதை அடுத்து குற்றவாளிகள் சிறை வைக்கப்பட்டிருக்கும் போர்ட் செட் சிறையில் இடம்பெற்ற வன்முறைகளில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


எகிப்தின் முன்னாள் அதிபர் ஒசுனி முபாரக் பதவியில் இருந்து அகற்றப்பட்ட இரண்டாவது ஆண்டு நிறைவின் போது வன்முறைகள் இடம்பெற்ற வேளையிலேயே இத்தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. எகிப்தியப் புரட்சியை காட்டிக் கொடுத்து விட்டதாக இன்றைய அரசுத்தலைவர் முகமது மோர்சிக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் நேற்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். எகிப்து முழுவதும் இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டங்களின் போது குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர். 450 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.


சென்ற ஆண்டு பெப்ரவரி 1 ஆம் நாள் போர்ட் செட் கால்பந்து அணி 3-1 என்ற கணக்கில் அல்-ஆஹ்லி அணியை வென்றதை அடுத்து அங்கு கலவரம் மூண்டது. அல்-ஆஹ்லி அணி ஆதரவாளர்கள் மைதானத்தில் இறங்கி ஆட்டக்காரர்களையும் ஆதரவாளர்களையும் தாக்கத் தொடங்கினர். மைதானத்தின் ஒரு பகுதி தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. மொத்தம் 74 பேர் கொல்லப்பட்டனர்.


மூலம்[தொகு]