ஏமன் தலைவர் சாலே ஷெல் தாக்குதலில் காயம்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சூன் 4, 2011

ஏமனின் அரசு தலைவர் அலி அப்துல்லா சாலே மற்றும் பிரதமர் ஆகியோர் நேற்று வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றில் காயமடைந்ததாக ஏமன் அதிகாரிகள் தெரிவித்தனர்.


அலி அப்துல்லா சாலே

ஏமன் அரசுத்தலைவரின் மாளிகையில் அமைந்துள்ள மசூதி ஒன்றில் அரசுத்தலைவர் தொழுகையில் இருந்த போதே ஷெல் வீழ்ந்து வெடித்தது. துணைப் பிரதமர், நாடாளுமன்ற சபாநாயகர் உட்படப் பலர் காயமடைந்துள்ளனர். 7 பேர் கொல்லப்பட்டனர்.


இத்தாக்குதலில் அரசுத்தலைவர் சாலே சிறு காயங்களுக்கு உள்ளானதாகவும் ஆளும்கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். தாக்குதலுக்குப் பின்னர் நேற்றிரவு தொலைக்காட்சியில் அவரது உரை ஒலிபரப்பப்பட்டது. தான் நலமாக உள்ளதாக அவர் தெரிவித்தார். தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சாதிக் அல்-அஹ்மர் தலைமையில் இயங்கும் பழங்குடியினரே நடத்தியுள்ளனர் என அவர் தெரிவித்தார். இவர்களுக்கும் தற்போது நாட்டில் கிளர்ச்சி நடத்தும் இளைஞர்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என அவர் தெரிவித்தார். இத்தாக்குதலில் இறந்தவர்களை அவர் மாவீரர்கள் எனப் போற்றினார்.


இதற்கிடையில், இத்தாக்குதலில் காயமடைந்த அரசுத்தலைவர் சாலே மேலதிக சிகிச்சைக்காக சவுதி அரேபியா சென்றுள்ளதாக அல்-அராபியா செய்தி நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால் இத்தகவலை ஏமன் அதிகாரிகள் மறுத்திருந்தாலும், சவுதி அரேபிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால் தாக்குதலில் படு காயமடைந்த ஐந்து மூத்த தலைவர்கள் சவுதி அரேபியாவுக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளதாக யேமன் அதிகாரிகள் தெரிவித்தனர்.


அரேபிய நாடான ஏமனில் 33 ஆண்டுகளாக சலே பதவியிலிருந்து வருகிறார். அவரை பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. கடந்த செவ்வாய் அன்று இடம்பெற்ற வன்முறைகளில் 37 பேர் உயிரிழந்தனர்.


மூலம்[தொகு]