ஐரோப்பாவின் எர்செல் விண்வெளித் தொலைநோக்கி தனது திட்டத்தை நிறைவு செய்தது

விக்கிசெய்தி இலிருந்து

புதன், மே 1, 2013

ஐரோப்பாவின் பில்லியன் யூரோ பெறுமதியான எர்செல் விண்வெளி அவதான நிலையம் அதன் இயக்கத்துக்குத் தேவையான திரவ ஈலியம் முடிவடைந்த நிலையில் தனது விண்வெளித் திட்டத்தை நிறைவு செய்தது. இந்நிலையத்தின் உபகரணங்களை அதி குறைந்த வெப்பநிலையில் வைத்திருக்க திரவ ஈலியம் அவசியமானதாகும்.


எர்செல் விண்கலம் அனுப்பிய ரொசெட் விண்முகிலின் (நெபுலா) படிமம்

எர்செல் விண்வெளித் தொலைநோக்கி தற்போது சூடடைந்துள்ளதால் இத்தொலைநோக்கி வானைக் காண இயலாத நிலைக்கு வந்துள்ளது.


மீஅகச்சிவப்புக் கதிர்களுக்கு மிக்க உணர்திறனுள்ள இந்த எர்செல் விண் தொலைநோக்கி விண்மீன்களின் தோற்றம், விண்மீண் திரள்களின் வளர்ச்சியையும் ஆராய்வதற்காக 2009 ஆண்டில் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. விண்ணுக்கு அனுப்பப்பட்ட விண்வெளி அவதான நிலையங்களில் இதுவே மிகவும் வலுக்கூடிய தொலைநோக்கி ஆகும்.


இந்த செயற்கைக்கோள் தற்போது பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிமீ தூரத்தில் உள்ளது.


செருமனியின் டார்ம்ஸ்டாட் என்ற இடத்தில் உள்ள ஐரோப்பிய விண்வெளி மையம் ஈசாவின் கட்டுப்பாட்டு மையத்தில் இன்னும் சில வாரங்களில் எர்செல் விண்கலத்துக்கான சில கடைசி சோதனைகள் நடத்தப்படவுள்ளன. "அதன் பின்னர் இது ஞாயிற்றுமைய ஒழுக்கிற்குள் தள்ளப்பட்டு செயலற்றதாக்கப்படும்," என எர்செல் விண்கலத்தின் ஒருங்கிணைப்பாளர் மிச்சா சிமித் கூறினார்.


எர்செல் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு பூமிக்குக் கிட்டவாக வரமாட்டாது எனக் கூறப்படுகிறது.


மூலம்[தொகு]