ஐரோப்பாவின் முதலாவது புவியிடங்காட்டி கலிலியோ செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக ஏவப்பட்டன

விக்கிசெய்தி இலிருந்து

சனி, அக்டோபர் 22, 2011

கலிலியோ எனப்படும் ஐரோப்பாவின் முதலாவது புவியிடங்காட்டி செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டன. அமெரிக்காவின் புவியிடங்காட்டிக்கு மாற்றீடான ஐரோப்பியாவின் இத்திட்டத்திற்கு ஐரோப்பிய ஆணையம் பல பில்லியன் யூரோக்களை முதலீடு செய்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இத்திட்டத்தின் மூலம் பெரும் பயன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சோயுஸ் ஏவுகலன் மூலம் கலிலியோ செலுத்தப்படுகிறது

இரண்டு கலிலியோ செயற்கைக்கோள்கள் உருசியாவின் சோயுஸ் ஏந்துகலன் மூலம் அதன் புதிய ஏவுதளமான பிரெஞ்சு கயானாவில் இருந்து நேற்று உள்ளூர் நேரம் 07:30 மணிக்கு ஏவப்பட்டன.


செயற்கைக்கோள்களை பூமியில் இருந்து 23,222 கிமீ உயரச் சுற்றுவட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கு சோயுஸ் ஏவுகலனுக்கு 3 மணித்தியாலம் 49 நிமிடங்கள் பிடித்தது.


"ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஏனைய உலக நாடுகளுடன் போட்டியிடுவதற்கு இச்செயற்கைக்கோள்கள் அவசியமானதாகும்," என ஐரோப்பிய ஆணையத்தின் பிரதித் தலைவர் அண்டோனியோ தஜானி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஏற்கனவே இவ்வகையான 18 செயற்கைக்கோள்கள் தயாரிப்புக்கு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதற்கும் மேலதிகமாக 6 முதல் 8 வரையான செயற்கைக்கோள்களுக்கு தொழில்ரீதியான போட்டிக்கு தஜானி அறிவிப்புக் கொடுத்துள்ளார்.


அமெரிக்காவின் புவியிடங்காட்டித் திட்டத்துடன் ஒப்பிடுகையில், ஐரோப்பாவின் கலிலியோ திட்டம் துல்லியமான அணுக்கடிகாரங்களைக் கொண்டுள்ளன. இதனால், கலிலியோ தரும் தகவல்கள் அமெரிக்கத் திட்டத்தினதையும் விடத் துல்லியமானதாக இருக்கும் என நம்பப்படுகிறது.


கலிலியோ திட்டம் செயல்படும் போது, அது இரண்டு தரைக் கட்டுப்பாட்டு நிலையங்களைக் கொண்டிருக்கும். ஒன்று செருமனியின் மியூனிக் நகருக்கு அருகாமையிலும், மற்றையது இத்தாலியின் ஃபூச்சினோ நகரிலும் அமைந்திருக்கும். ஆரம்பத்தில் இத்திட்டம் 2012 ஆம் ஆண்டில் தொழிற்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது 2015 ஆம் ஆண்டளவிலேயே தொழிற்பட ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முழுத் திட்டமும் 2019 இல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மூலம்[தொகு]