ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் பாதுகாப்பு, அணுசக்தி ஒப்பந்தங்கள்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், நவம்பர் 4, 2010


வியட்நாம், உருசியாவுடனும், சப்பானுடனும் அணுசக்தி உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளது. வியட்நாமில் அணுமின் நிலையங்களை பொதுமக்கள் அணுசக்திப் பிரிவின் கீழ் அமைப்பதற்கான உடன்பாடுகள் இதன் மூலம் எட்டப்பட்டுள்ளது. வியட்நாம் தலைநகர் ஹனோயில் வியட்நாம் தலைவர் நியூவென் மின் திரியெத் உருசிய அதிபர் மெட்வேடெவுடனும், சப்பானியப் பிரதமர் நவோட்டோ கானுடனும் தனித்தனியே நடத்திய பேச்சுவார்த்தைகளை அடுத்து இந்த உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டன.


இதே போன்றொரு உடன்பாடு ஐரோப்பாவிலும் இவ்வாரம் இடம்பெற்றுள்ளது. ஐக்கிய இராச்சியப் பிரதமர் டேவின் கேமரனுக்கும் பிரெஞ்சு அரசுத்தலைவர் நிக்கோலா சர்க்கோசிக்கும் இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 50 ஆண்டுகளுக்குப் பின் இரு நாடுகளும் இணைந்து செயற்பட உடன்பாடு செய்துகொண்டனர். இரு நாடுகளுக்கிடையே பாதுகாப்புக்காக தனியாக ஒரு படையை ஒதுக்கவும், செலவுகளை மிச்சப்படுத்தும் பொருட்டு இணைந்து செயல்படவும் முன்வந்துள்ளனர். இந்த உடன்பாடுகளில் இரு நாடுகளும் அவர்களுடைய அணுசக்தி அறிவியல் தொழில் நுட்பங்களையும் வசதிகளையும் பகிர்ந்து கொள்ளவும் முடிவெடுத்துள்ளனர்.


புதிதாக உருவாக்கப்பட்ட ஆங்கிலோ பிரஞ்சு அதிரடிப் படைகள் கூட்டு பயிற்சிகளை மெற்கொள்ளவும், இரு நாடுகளும் குறைந்தது ஒரு விமானந்தாங்கி கப்பலை தயார் நிலையில் வைத்திருக்கவும் இவை வழிவகை செய்யும். தங்கள் வசமுள்ள அணு ஆயுதங்களின் திறனை சோதித்துப் பார்க்க வழி செய்யவும் சோதனைக் கூடங்களை நிறுவவும் இந்த ஒப்பந்தம் வழி செய்கிறது.


மூலம்[தொகு]