உள்ளடக்கத்துக்குச் செல்

ஓசியானிக் வைக்கிங் கப்பல் அகதிகளுக்கு அரசியல் தஞ்சம் தர ஆஸ்திரேலியா இணக்கம்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, நவம்பர் 13, 2009


இந்தோனேசியக் கடலில் ஓசியனிக் வைக்கிங் கப்பலில் கடந்த 25 நாட்களாகத் தங்கியிருக்கும் 78 இலங்கைத் தமிழருக்கும் அரசியல் தஞ்சம் வழங்க ஆத்திரேலியா கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்துள்ளது.


அரசியற் தஞ்சம் பெற உரித்தானவர்கள் எதிர்வரும் 12 வாரங்களுக்கிடையில் ஆஸ்திரேலியாவில் அரசியற் தஞ்சம் பெறுவர் என்று அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இலங்கையர்களுக்கு எழுத்துமூல வாக்குறுதி வழங்கியுள்ளார்கள்.


இவர்களில் அரசியற் தஞ்சம் பெற உரித்தானவர்கள் என ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருக்கும் 30 பேருக்கு எதிர்வரும் 4 வாரங்களுக்கிடையில் ஆஸியில் அரசியற் தஞ்சம் கிடைக்கும் என்றும் இவ்வதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இந்த வாக்குறுதியை அடுத்து 20 இற்கும் மேற்பட்டோர் இன்று அக்கப்பலில் இருந்து வெளியேறியுள்ளதாக "தி ஆஸ்திரேலியன்" பத்திரிகை தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் இந்தோனேசிய அதிகாரிகளினால் "பின்டான்" என்ற இந்தோனேசியத் தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டு மருத்துவ, மற்றும் ஆளடையாளப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவர். இவர்களில் பலர் ஏற்கனவே அகதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இவர்கள் அனைவரும் அடுத்த ஆறு வாரங்களில் ஆஸ்திரேலியாவில் குடியேற அனுமதிப்படுவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.


கப்பலில் உள்ள ஏனையவர்களின் விண்ணப்பங்கள் 12 வாரங்களில் பரிசீலிக்கப்படும் என, ஆஸ்திரேலியக் குடிவரவுத்துறை அமைச்சர் கிரிஸ் ஈவன்ஸ் தெரிவித்துள்ளார். அவர்களில் அதிகமானவர்கள் அகதிகள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களை வெளியேற்றும் எண்ணம் தமக்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதற்கு முன்னதாக, ஒசியானிக் வைக்கிங் கப்பலில் உள்ளவர்களுக்கு குடியுரிமை வழங்க அரசாங்கம் உறுதியளித்தால், அவர்களை இந்தோனேசியாவில் இறக்குவதற்கு தாம் உதவி செய்வதாக அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் தெரிவித்திருந்தது.

மூலம்